2022 ஐ.பி.எல் தொடரில் பங்கேற்காதது குறித்து சாம் கரன் பதிவிட்டுள்ள சோகப் பதிவு – வருத்தத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்

0
842
Sam Curran IPL

கடந்த ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் வீரராக இங்கிலாந்து அணியை சேர்ந்த சாம் கரன் விளையாடி வந்தது நம் அனைவருக்கும் தெரியும். 2019ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியில் அறிமுகமாகி, பின்னர் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பேட்டிங் மற்றும் பவுலிங் என மிக சிறப்பாக விளையாடினார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு ஒரு அணி குறைந்தபட்சம் நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும் என்கிற காரணத்தினால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவீந்திர ஜடேஜா மகேந்திர சிங் தோனி மொயின் அலி மற்றும் ருத்ராஜ் கெய்க்வாட் ஆகியோரை தக்க வைத்துக் கொண்டது.

- Advertisement -

இருப்பினும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் சென்னை அணி நிர்வாகம் நிச்சயமாக சாம் கரனை கைப்பற்றிக் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளதென அந்த அணியின் ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் குறித்து சாம் கரன் பதிவிட்ட பதிவு சிஎஸ்கே ரசிகர்களை தற்பொழுது வருத்தமடைய செய்துள்ளது.

2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புறக்கணித்துள்ள சாம் கரன்

கடந்த ஆண்டு சாம் கரனுக்கு கீழ் முதுகு பகுதியில் தசை பிடிப்பு ஏற்பட்டது. மருத்துவ குழு ஸ்கேன் செய்து பார்க்கையில் அவருக்கு சற்று பலத்த காயம் உள்ளதென தெரிய வந்தது. அதன் காரணமாகவே சமீபத்தில் நடந்து முடிந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் கூட அவர் பங்கேற்கவில்லை.

முறையான சிகிச்சை மற்றும் ஓய்வை எடுத்து வரும் அவர் நிச்சயமாக ஐபிஎல் தொடரில் மீண்டும் களம் இறங்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், இன்று ட்விட்டர் வலைதளத்தில் தன்னுடைய உடல் நலம் குறித்து அவர் ஒரு பதிவிட்டார்.

- Advertisement -

“நான் தற்பொழுது படிப்படியாக காயத்திலிருந்து குணமாகி வருகின்றேன். என்னை நினைத்து என்னுடைய ரசிகர்கள் யாரும் வேதனை கொள்ள வேண்டாம். எனக்கு இன்னும் சில ஓய்வு தேவை, ஆகவே இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நான் பங்கேற்கப் போவதில்லை. மீண்டும் முன்பு போல விளையாட தற்பொழுது முறையான பயிற்சி எடுத்து வருகிறேன். மிகப்பெரிய ஓய்வுக்குப் பின்னர் கவுண்டி கிரிக்கெட் கிளப் ( இங்கிலாந்தில் நடைபெறும் ஒரு கிரிக்கெட் தொடர் ) போட்டிகளில் நிச்சயமாக களம் இறங்குவேன்.”என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கிறிஸ் கெய்ல்,மிட்செல் ஸ்டார்க், பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகிய வீரர்கள் கலந்து கொள்ளாத நிலையில், தற்போது அந்த வரிசையில் இளம் அதிரடி ஆல்ரவுண்டர் வீரரான சாம் கரனும் இணைந்துள்ள செய்தி இந்திய ரசிகர்களை வேதனையடைய செய்துள்ளது.