நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்ததை அடுத்து அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரான பார்டர் கவாஸ்கர் டிராபியில் விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் கௌதம் கம்பீர் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் இருந்து பதவி விலக நேரிடலாம் என்று வியப்பூட்டும் தகவல்கள் வெளி வருகின்றன.
கம்பீர் பதவி விலக வாய்ப்பு
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக இதே சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய அணி தொடர்ச்சியாக மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்து சொந்த மண்ணில் முதல்முறையாக ரோகித் சர்மா தலைமையில் ஒயிட் வாஷ் ஆனது. இதனை தொடர்ந்து தற்போது ரோகித் சர்மா மீதும் கம்பீர் மற்றும் இந்திய அணி மீது விமர்சனங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.
மேலும் இந்திய ஆடுகளங்கள் தயாரிப்பில் இருந்து அணித்தேர்வு வரை அனைத்திலும் தலைமை பயிற்சியாளரின் தலையீடு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுவே இந்திய அணியின் மோசமான தோல்விக்கும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மட்டுமே கம்பீருக்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பு எனவும், அதில் அவர் தனது தகுதியை நிரூபிக்க தவறினால் தனது பயிற்சியாளர் பதவியை விட்டு விலக அதிக வாய்ப்பு இருப்பதாக ஆங்கில செய்தித்தாளில் ஒரு அறிக்கை வெளிவந்துள்ளது.
சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு புதிய பயிற்சியாளர்
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சோபிக்க தவறினால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு மட்டுமே கம்பீர் பயிற்சியாளராக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் பயிற்சியாளராக பொறுப்பேற்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன. எனவே ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் கம்பீர், ரோகித் சர்மா மற்றும் இந்திய அணிக்கு முக்கிய தொடராக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:நல்லா ஆடியும்.. ருதுராஜுக்கு வாய்ப்பு தராத காரணம் இதுதான் – சூரியகுமார் யாதவ் மௌனம் கலைப்பு
மேலும் இதில் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பதையும் மறந்து விடக்கூடாது. ஆஸ்திரேலியா அணியும் கடந்த இரண்டு முறை பார்டர் கவாஸ்கர் கோப்பையை இழந்துள்ளதால் இந்த முறை இந்திய அணியிடமிருந்து அதை கைப்பற்ற மிக தீவிரமான வகையில் அனைத்து முயற்சிகளையும் வெளிப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.






