நேற்று ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தில் பெங்களூர் சின்னசாமி மைதானத்திற்கு வெளியே நடைபெற்ற துயரச் சம்பவத்திற்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி நேற்று முன்தினம் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. இதற்கு அடுத்து பெங்களூரில் நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் மோசமான துயர நிகழ்வு நடைபெற்று விட்டது. தற்போது இந்த வெற்றி கொண்டாட்ட நிகழ்வுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறப்பட்டிருக்கிறது.
பிசிசிஐ செயலாளர் அறிக்கை
இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா பேசும்பொழுது “இந்த துயரச்சம்பவம் சில யோசனைகளை கொண்டு வருகிறது. ஏனென்றால் ஆண்டுதோறும் ஏதாவது ஒரு அணி வெற்றி பெறப் போகிறது. அப்பொழுது அந்தந்த அணிகள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட போகின்றன. நாம் இதை எப்படி பாதுகாப்பாக இனி நடத்தப் போகிறோம் என்று யோசிக்க வேண்டும். அதே சமயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் அணிகளின் கொண்டாட்டங்களின் மீது கட்டுப்பாடு செலுத்த முடியாது”
“நாங்கள் நடத்திய ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஒரே இடத்தில் கூடினார்கள். நாங்கள் எந்தவித பாதுகாப்பு குறைபாடும் இல்லாமல் அதை நடத்தி முடித்துக் கொடுத்திருக்கிறோம். சரியான முறையில் காவல் கட்டுப்பாடு இருந்தது. ஆனால் பெங்களூரில் ஏதோ பயங்கரமாக நடந்து விட்டது. இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு எந்த பங்கும் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.
ஐபிஎல் சேர்மேன் அறிக்கை
இதுகுறித்து ஐபிஎல் சேர்மேன் அருண் துமால் பேசும்பொழுது “இது போன்ற ஒரு சம்பவத்திற்கு நாங்கள் எப்படி பொறுப்பேற்றுக் கொள்ள முடியும்? இது துயரமான ஒரு சம்பவம். இதற்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் எங்களுடைய கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றுக்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது. கூட்ட நெரிசல் மைதானத்திற்கு வெளியே நேரடியாக நடந்ததா? என்று எனக்குத் தெரியாது. மேலும் மைதான வாயிலில் ஐபிஎல் அதிகாரிகள் யாராவது இருந்து கூட்டத்தை சரி செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? நாங்கள் ஏன் அங்கு போகப் போகிறோம்?”
இதையும் படிங்க : விராட் கோலி அரசியல்வாதி கிடையாது.. அவரைப் பத்தி இந்த குற்றத்தை சொல்லாதீங்க – அதுல் வாசன் வேண்டுகோள்
“ஆர்சிபி அணி உடன் தொடர்பில் இருந்தேனா என்று கேட்டால், ஆமாம் சம்பவம் நடந்தது தெரிந்ததும் நான் உடனே அது குறித்து மைதானத்திற்கு உள்ளே இருந்த ஆர்சிபி அணி நிர்வாகத்திற்கு தெரிவித்தேன். அவர்கள் மைதானத்திற்கு வெளியே என்ன நடக்கிறது என்று தங்களுக்கு தெரியாது என்று கூறினார்கள். இதைத்தொடர்ந்து உடனடியாக நிகழ்வை ரத்து செய்வதாக சொல்லி ரத்து செய்து விட்டார்கள்” என்று கூறியிருக்கிறார்.






