“இதெல்லாம் பெரிய மனுஷன் பேசுற பேச்சா?” – கங்குலியை திட்டி தீர்த்த பாகிஸ்தான் வீரர் சல்மான் பட்!

0
551
Ganguly

இங்கிலாந்தில் வைத்து நடந்து முடிந்த இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் படுதோல்வி அடைந்து கோப்பையைப் பறிகொடுத்தது!

இதையடுத்து இந்திய அணியின் நிர்வாகம் மீதும் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து எழுந்தன.

- Advertisement -

இந்த நேரத்தில் இவர்களைக் காப்பாற்றும் பொருட்டு பேசிய கங்குலி “ரோகித் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவரும் தோனியும் ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்று உள்ளார்கள். ஐபிஎல் வெல்வது உலகக்கோப்பையை வெல்வதை விட கடினமானது.

ஏனென்றால் 14 போட்டிகள் விளையாடிதான் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறமுடியும். உலகக்கோப்பையில் அரைஇறுதிக்கு 4 அல்லது 5 ஆட்டங்கள் மட்டுமே தேவை. ஆனால் ஐபிஎல் தொடரில் சாம்பியன் ஆவதற்கு அதிகபட்சம் 17 ஆட்டங்கள் தேவை.

விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேறியதற்குப் பிறகு தேர்வாளர்களுக்கு கேப்டன் தேவைப்பட்டார். அந்த நேரத்தில் ரோகித் சிறந்த தேர்வாக இருந்தார். அவர் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையையும், ஆசியக்கோப்பையையும் வென்றார். சர்வதேச மட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.

- Advertisement -

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு வந்து நாம் விளையாடினோம் ஆனால் தோற்றோம். கடந்த முறையும்தான் இதேபோல வந்து நாம் தோற்றோம். மேலும் டி20 உலகக்கோப்பை அரைஇறுதிக்கும் வந்தோம். எனவே தேர்வாளர்கள் சிறந்த ஒரு வீரரையே பொறுப்புக்குத் தேர்ந்தெடுத்தனர்” என்று கூறியிருந்தார்.

கங்குலியின் இந்த காப்பாற்றும் பேச்சுக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட்டு கடுமையான தனது எதிர்ப்பைத் தெரிவித்து விமர்சனத்தை முன்வைத்து இருக்கிறார்.

இதுகுறித்து சல்மான் பட் கூறும் பொழுது
“உலகத்தரம் வாய்ந்த ஒரு வீரரிடம் இருந்தும், ஒரு கேப்டனிடம் இருந்தும் நான் இப்படி ஒரு பேச்சை எதிர்பார்க்கவில்லை. எப்படி சர்வதேச கிரிக்கெட்டையும் இப்படி ஒரு லீக் கிரிக்கெட்டையும் ஒப்பிட்டு பேச முடிகிறது? இது ஒப்பிடவே முடியாதது.

நீங்கள் மிகச் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வடிவத்தை, மிகக் குறுகிய வடிவத்தோடு ஒப்பிடுகிறீர்கள். அணி முழுவதும் சர்வதேச வீரர்கள் விளையாடும் ஒரு தொடரோடு, அணியில் குறைந்தபட்ச சர்வதேச தரம் வாய்ந்த வீரர்கள் விளையாடும் தொடரை ஒப்பிடுகிறீர்கள். இந்த ஒப்பீடு மிகவும் தவறானது!” என்று கூறியிருக்கிறார்!