“இந்தியாவுக்கு சாதகமாக ஆடுகளம் அமைக்கப்படுகிறதா?” – சர்ச்சைகளுக்கு கவாஸ்கர் சரமாரி விளாசல்!

0
732
Gavaskar

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் தற்பொழுது மும்பை வான்கடே மைதானத்தின் ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான முறையிலும், மேலும் ஆடுகளம் மெதுவாகவும் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதான பேச்சுகள் வந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

போட்டி நடைபெற இருக்கும் குறிப்பிட்ட ஆடுகளம் புதிதான ஆடுகளம் என்றும் சொல்லப்படுகிறது. அரை இறுதிக்கு புதிய ஆடுகளமா? என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் நக்கலாக விமர்சனம் செய்திருக்கிறார்.

பொதுவாக இந்த உலகக் கோப்பை தொடர் முழுக்கவே இந்திய அணி நிர்வாகம் உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு சாதகமாக செயல்படுவதற்கு ஐசிசி வைத்து வேலை செய்கிறது என்று பரவலாக வெளியில் இருந்து தேவையற்ற சர்ச்சைகளை எழுப்பி வருகிறார்கள்.

இந்த இந்திய அணியை பொறுத்தவரையில் எந்த வகையான ஆடுகளமாக இருந்தாலும் சிறப்பாக செயல்படுவதற்கான பந்துவீச்சாளர்களை கொண்டிருக்கிறது. மேலும் எல்லா வகையான களத்திலும் விளையாடக்கூடிய சிறந்த பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். இவர்கள் உண்மையிலேயே சிறப்பாக செயல்படுகிறார்கள். ஆனாலும் தவறான முறையில் விமர்சனம் வருகிறது.

- Advertisement -

வாசிம் அக்ரம் போன்ற நட்சத்திர முன்னாள் வீரர்கள் இப்படியான விமர்சனங்களுக்கு எதிராக இந்திய அணிக்கு ஆதரவாக தங்களுடைய கருத்தை முன் வைத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது மும்பை ஆடுகள தயாரிப்பு குறித்து பேசி உள்ள சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “இந்த ஆடுகளத்தில் கொஞ்சம் ஸ்பின் இருக்கலாம். பொதுவாக மும்பை ஆடுகளத்தில் ரன்கள் வரும். எனவே அதற்கு பிரச்சினை இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். மேலும் ஆடுகளம் எப்படி இருந்தாலும் சிறப்பாக செயல்படக்கூடிய பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள்.

இது குறித்து பொதுவாக உங்களுக்கு எல்லாம் தெரிந்ததுதான். எழுதுவதற்கு எதுவுமே இல்லாத பொழுது இப்படியான குற்றச்சாட்டுகளை எழுதி தங்களுடைய பக்கங்களை நிரப்பி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் என்னை பொருத்தவரை இதில் எந்த வித்தியாசமும் இல்லை.

டாஸ் போடப்பட்டு ஏதாவது ஆடுகளத்தில் இருந்து அது குறித்து பேசலாம். ஆனால் இவர்கள் டாஸ் போடப்படுவதற்கு முன்பாகவே ஆரம்பித்து விட்டார்கள். எனவே இவர்கள் எழுதுவதற்கு தேவையாக ஆடுகளத்தை பற்றி ஆரம்பித்து வைத்து எழுதிக்கொண்டு பேசிக்கொண்டு இருக்கிறார்கள்!” என்று கூறியிருக்கிறார்!