கல்யாணத்தில் மணமகளா இல்லை மணமகள் தோழியா? இந்தியா அணியை அகர்கர் என்ன செய்யப் போகிறார்? – பிசிசிஐக்கு கவாஸ்கர் சரமாரி கேள்வி!

0
1233
Gavaskar

சில வாரங்களுக்கு முன்பு ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்றுப்போட்டியில், மிக மோசமாக விளையாடி, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக விளையாடும் வாய்ப்பை வெஸ்ட் இண்டீஸ் அணி இழந்தது.

இப்படியான ஒரு நேரத்தில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோற்ற இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்று வருகிறது. இந்த காரணத்தால் இந்த தொடருக்கு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு எதுவும் இல்லை என்பதுதான் உண்மை.

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் மூத்த வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தன்னுடைய யூடியூப் சேனலில் பேசி இருக்கும் பொழுது, இப்படியான ஒரு அணியுடன் ஒரு சுற்றுப்பயணம் இருக்கிறது எனும் பொழுது, உம்ரான் மாலிக் மாதிரியான திறமை கொண்ட இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, அவர்களைப் பழக்கப்படுத்த வேண்டும். மாறாக உனட்கட் மாதிரியான ஆட்களை கூட்டி செல்வதால் என்ன பயன் இருக்கப் போகிறது என்று கேள்வி எழுப்பியிருந்தார்!

இந்திய அணியின் இந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால், ருதுராஜ் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார் ஆகியோருக்கு முதல் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதில் விளையாடும் அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் முகேஷ் குமார் இருவரும் இடம் பெற்று இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமானார்கள். இதேபோல் முகேஷ் குமாருக்கு அடுத்தடுத்த இரண்டு தொடர்களிலும், ஜெய்ஸ்வாலுக்கு டி20 தொடரிலும், திலக் வர்மாவுக்கு டி20 தொடரிலும் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் மற்றும் மூத்த வீரர், பேட்டிங் மாஸ்டர் சுனில் கவாஸ்கர் மிகக் காட்டமான கேள்விகளை பிசிசிஐ நோக்கி வீசி இருக்கிறார். அவர் புதிய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்க்கர் குறித்தும் தன்னுடைய கருத்தை மிக வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். கவாஸ்கர் தொடர்ந்து இப்படியான கருத்துக்களை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது ” இந்த பலம் இழந்த வெஸ்ட் இண்டீஸ் தாக்குதலுக்கு எதிராக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அடித்த ரன்கள் மூலமாகத் தேர்வாளர்கள் தங்களுக்குத் தெரியாத எந்தவொரு புது விஷயத்தை கற்றுக் கொண்டார்கள்? என்ற கேள்வி எழுகிறது. சில இளம் வீரர்களுக்கு இந்தத் தொடரில் வாய்ப்பளித்திருந்தால் அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்று கண்டுபிடித்து இருக்கலாம் இல்லையா?! தேர்வாளர்கள் இளம் வீரர்கள் எப்படி செயல்படுகிறார்கள்? என்று தெரிந்து கொள்ள விரும்பவில்லை போல.

இப்போது அஜித் அகர்கர் இந்திய கிரிக்கெட்டின் புதிய தேர்வு குழு தலைவராக வந்திருக்கிறார். இவரது பதவி காலத்தில் இந்தியத் தேர்வுக்குழுவின் அணுகு முறையில் ஏதாவது மாற்றங்கள் இருக்குமா? அல்லது இந்திய கிரிக்கெட் அணி மணமகள் அல்ல மணமகளின் தோழிதான் என்கின்ற அதே பழைய கதையேதான் தொடருமா என்று பார்க்க வேண்டும்!” என்று தன்னுடைய கருத்தை மிக காட்டமாகவே பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழு நோக்கி கவாஸ்கர் முன் வைத்திருக்கிறார்.