ஒலிம்பிக்கில் இடம்பெறப் போகிறதா கிரிக்கெட் ?!!- ஐசிசி என்ன பரிந்துரை செய்திருக்கிறது ?? விவரங்கள் உள்ளே!!

0
133

டி20 வடிவ கிரிக்கெட் போட்டிகள் சர்வதேச அளவில் பிரபலமான பிறகு கிரிக்கெட்டை அறியாத நாடுகளிலும் தற்போது கிரிக்கெட்டானது வேகமான அளவில் பரவி வருகிறது. இந்த போட்டிகளானது குறைந்த கால அளவில் நடப்பதாலும் ஒரு நாள் மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டை விட விரைவாக இருப்பதால் இந்தப் போட்டிகளுக்கு ரசிகர்கள் உலகெங்கிலும் அதிகரித்து வருகின்றனர் .

இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் டி20 கிரிக்கெட் லீக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன . கிரிக்கெட் அவ்வளவு பிரபலமாகாத அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் கூட தற்போது கிரிக்கெட் வேகமாக பரவி வருகிறது .

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் தற்போது சர்வதேச வீரர்கள் கலந்து கொள்ளும் டி20 கிரிக்கெட் நடைபெற்று வருகிறது . அமெரிக்க ஐக்கிய குடியரசிலும் வருகின்ற ஜூலை மாதம் முதல் மேஜர் லீக் கிரிக்கெட் என்ற மிகப்பெரிய டி20 தொடர் நடத்தப்பட இருக்கிறது .

ஒலிம்பிக் போட்டிகளை பொருத்தவரை நீண்ட காலமாகவே அதில் கிரிக்கெட்டை இணைப்பதற்கு முயற்சிகள் நடைபெற்று வந்தன . ஆனால் கிரிக்கெட்டின் கால அளவை கருத்தில் கொண்டு ஒலிம்பிக் கமிட்டி அதனை நிராகரித்து வந்தது . தற்போது 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டையும் இணைப்பதற்கு சர்வதேச கவுன்சில் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது .

இதன் ஒரு பகுதியாக ஐசிசி ஆறு அணிகளை கொண்ட ஒரு டி20 தொடரை ஒலிம்பிக் கமிட்டிக்கு பரிந்துரை செய்துள்ளது.இதில் சர்வதேச ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் கலந்து கொள்ளும் . ஐசிசி தர வரிசையில் முதல் ஆறு இடங்களில் இருக்கும் நாடுகளைச் சார்ந்த அணிகள் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்படும் . இது குறித்த இறுதி முடிவை 2028 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி குழுவினர் வருகின்ற மார்ச் மாதம் முடிவு செய்வார்கள் என தெரிகிறது .

இதுகுறித்து மும்பையில் நடைபெற்ற ஐசிசி யின் கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது . இதில் பேசியுள்ள ஐசிசி உறுப்பினர்கள் ” 2028 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை இடம் பெறச் செய்ய தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். அதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக ஆறு அணிகளை கொண்ட டி20 போட்டிகளை ஒலிம்பிக் கமிட்டிக்கு பரிந்துரை செய்திருக்கிறோம். டி10 போட்டிகளை பரிந்துரை செய்ய இயலாது . ஏனெனில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் விதிமுறைப்படி பரிந்துரைக்கப்படும் போட்டிகளில் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று இருக்க வேண்டும் . இதன் காரணமாக ஆறு அணிகளை கொண்ட டி20 போட்டி தொடரை 2028 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் குழுவிற்கு பரிந்துரைத்து இருக்கின்றோம் . இதன் இறுதி முடிவுகள் வருகின்ற மார்ச் மாதம் தெரிய வரும்”என அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது .