இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் இந்திய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசிய விஷயங்கள் எப்படி பத்திரிகைகளுக்கு கசிந்தது? என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் கவலை தெரிவித்து இருக்கிறார்.
இந்திய அணி உள்நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் தடுமாறி வருகிறது. இந்த நிலையில் இந்திய அணியை சுற்றி நிறைய எதிர்மறையான விஷயங்கள் சென்று கொண்டு இருக்கின்றன.
இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் வீரர்கள் தங்களின் தனித்திட்டத்துடன் விளையாட கூடாது என்றும், போட்டிக்கு முன்பாக கொண்டுவரும் திட்டத்துடன்தான் செல்ல வேண்டும் என்றும், மேலும் இதை மீறக்கூடிய வீரர்கள் நீக்கப்படுவார்கள் என்றும் ஓய்வறையில் கடுமையாக பேசியதாக செய்திகள் கசிந்திருக்கிறது.
இத்தோடு ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு புஜாராவை தேர்வுக் குழுவிடம் கம்பீர் கேட்டதாகவும், அதற்கு தேர்வுக்குழு தலைவர் அகர்கர் மறுத்துவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூம் செய்திகள் கசிவது என்பது மிகவும் அபூர்வமானது மேலும் ஆச்சரியப்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இந்திய அணியில் எதுவாக இருந்தாலும் அங்கேயே பேசப்பட்டு தீர்க்கப்படுவதே இதுவரையில் இருந்து வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் கூறும்பொழுது ” இந்திய அணிக்குள் நடக்கக்கூடிய எந்த விஷயமாக இருந்தாலும், அது இந்திய அணிக்கு உள்ளேயே இருப்பதுதான் நல்லது. அந்த விஷயங்கள் வெளியில் கசிவது அணிக்கு நல்லது கிடையாது” என கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : ஐசிசி ரேங்க்.. 92 வருடத்தில் பும்ரா புதிய சாதனை.. விராட் ரோஹித் மோசமான சரிவு.. முழு விபரங்கள்
கம்பீர் உடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு போட்டியிட்ட டபுள்யூ.வி.ராமன் இது பற்றி கூறும் பொழுது “இப்பொழுதும் இந்திய அணிக்கு இந்த தொடரை டிரா செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எனவே அணியினர் தங்களது வேலையை செய்வதற்கு அவர்களை அனுமதிக்க வேண்டும். இது அணிக்குள் நடைபெறும் விஷயங்களை கசிய விட்டு நெருப்பை மூட்டுவதற்கான நேரம் கிடையாது. இது என்னுடைய தாழ்மையான பார்வை” என்று கூறி இருக்கிறார்.