இந்திய டெஸ்ட் அணியில் கேப்டன் என்கின்ற காரணத்திற்காகவே ரோஹித் சர்மாவுக்கு இடம் கிடைத்ததாகவும், நாங்களும் தொலைக்காட்சியில் அவரை நிறைய தேவையில்லாமல் ஆதரித்து விட்டதாகவும் இர்பான் பதான் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
இந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா திடீரென சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் ஃபார்ம் இல்லாத காரணத்தினால் ஒரு போட்டியில் நெருக்கடி காரணமாக தன்னைத்தானே நீக்கிக் கொண்டார்.
இந்த காலகட்டத்தில் ரோஹித் சர்மா டெஸ்ட் பேட்டிங் மிகவும் சுமாராக இருந்து வந்தது. பந்துக்கு மிகவும் மெதுவாக விளையாட சென்ற காரணத்தினால் அவர் ஒரே மாதிரியாக தொடர்ந்து ஆட்டம் இழந்து கொண்டு இருந்தார். இதன் காரணமாக அவர் மீது நிறைய விமர்சனங்கள் இருந்தது.
ரோகித் சர்மா கேப்டன் என்ற காரணத்தினால் மட்டுமே இந்திய டெஸ்ட் அணிகள் தொடர்வதாக பேசப்பட்டது. மேலும் அவருக்கு தொலைக்காட்சிகளில் நிறைய ஆதரவு முன்னாள் வீரர்களிடமிருந்து தவறாக கிடைப்பதாகவும், அவர் மீது நேர்மையான விமர்சனங்கள் வைக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்து இர்பான் பதான் பேசும் பொழுது ” ரோகித் சர்மா வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மிகவும் அற்புதமான வீரர். ஆனால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீபத்தில் மிகவும் சுமாராக இருந்தார். குறிப்பாக சிட்னி டெஸ்டில் அவர் விலகுவதற்கு முன்னால் அவருடைய பேட்டிங் சராசரி ஆறு என மிகவும் மோசமாக இருந்தது. அவர் கேப்டன் ஆக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் அவருக்கு அணியில் இடம் கிடைத்திருக்காது. நாங்கள் இதை உண்மையாகத்தான் சொன்னோம்”
இதையும் படிங்க : நானே சொல்றேன்.. சிஎஸ்கேவுக்கு சாம்சன் வரது ரொம்ப கஷ்டம்.. காரணம் இத்தனை இருக்கு – அஸ்வின் விளக்கம்
” ரோகித் சர்மாவை நாங்கள் தேவைக்கு அதிகமாக தொலைக்காட்சிகளில் ஆதரித்ததாக மக்கள் சொல்கிறார்கள். மக்களின் இந்த குற்றச்சாட்டில் உண்மை உள்ளது. நாங்கள் இப்படி பேச வேண்டிய சூழ்நிலை எதனால் உருவானது என்றால், உங்கள் தொலைக்காட்சி நேர்காணலுக்கு யாராவது வரும்பொழுது நீங்கள் தவறாக பேச முடியாதில்லையா? நீங்கள் அவர்களை தவறாக நடத்த மாட்டீர்கள்தானே? நீங்கள் அவரை அழைத்து இருக்கும் பொழுது நீங்கள் பணிவாகத்தான் நடந்து கொள்ள வேண்டும். அவர் எங்கள் விருந்தினராக இருந்ததால் நாங்கள் அப்படி நடந்து கொள்ள வேண்டியதாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.