இந்த இரண்டு தவறுகளால்தான் எல்லாம் போச்சு – ரோகித் சர்மா மீது இர்பான் பதான் விமர்சனம்!

0
101
Irfan pathan

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வந்து கொண்டிருக்கும் 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு வாய்ப்பை பெற முடியாமல் இந்திய அணி அதிர்ச்சியாக வெளியேறி இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக சரியான ரன்களை முதலில் பேட் செய்து எடுத்தும் பந்துவீச்சு சரியாக அமையாது போன காரணத்தினால் இந்திய அணிக்கு இந்த அதிர்ச்சிகரமான முடிவு அமைந்திருக்கிறது!

முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் துபாய் ஆடுகளத்தில் 181 ரன்களை இந்திய அணி குவித்தது. அந்த ஆடுகளத்திற்கு வெற்றிக்கான ரன் தான். ஆனால் இந்திய பந்து வீச்சாளர்களின் குறிப்பாக புவனேஸ்வர் குமார் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் அதிகமான ரன்களை விட்டுக்கொடுத்து அணிக்கு தோல்வியை கொண்டு வந்தார்கள். இதனோடு சாகலும் சேர்ந்துகொண்டார்.

- Advertisement -

அடுத்து இலங்கை அணியுடனான ஆட்டத்தில் அடிக்கப்பட்ட 173 ரன்களும் நல்ல ரன்களே. ஆனால் மீண்டும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சொதப்ப பாகிஸ்தான் அணியுடன் ஏற்பட்டது போல் கடைசி ஓவரின் 5வது பந்தில் தோல்வி வந்தது. 2 ஆட்டங்களில் இந்திய அணி வென்று இருக்கவேண்டிய ஆட்டங்கள். ஆட்டத்திற்கு துளியும் அதிர்ஷ்டம் இந்தியாவுக்கு இல்லை.

இந்த தோல்வி ரோகித் சர்மா- ராகுல் டிராவிட் கூட்டணி பற்றி பல விவாதங்களை கிரிக்கெட் மேடைகளில் எழுப்பி உள்ளது. சிலர் முகமத் சமியை ஏன் எடுக்கவில்லை என்று கேட்கிறார்கள். இன்னும் சிலர் ஆடும் அணியை தவறாக தேர்வு செய்தார்கள் என்கிறார்கள். இன்னொருபுறம் இவர்கள் வருகின்ற டி20 உலக கோப்பையில் முதல் சுற்றோடு வெளியேறுவார்கள் என்கிறார்கள். ரோகித் சர்மா மிக உறுதியாக எல்லா கேள்விகளுக்கும் டி20 உலக கோப்பையில் பதிலளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் இர்பான் பதான் மிக நுண்மையாக ஆராய்ந்து, இப்படியான குற்றச்சாட்டுகள் வைக்காமல், ஆட்டத்திற்குள் கேப்டன் ரோகித் சர்மா செய்த தவறுகள் என்ன என்று மிகச்சரியாக கூறியிருக்கிறார். பந்து வீச்சாளர்களை ரோகித்சர்மா ஆட்டத்தில் பயன்படுத்திய விதம் இர்பான் பதானுக்குச் சரியாகப் படவில்லை.

- Advertisement -

இது பற்றி அவர் கூறும் பொழுது ” 180 ரன்களை நெருங்கியது மிக நல்ல ஆட்டம். மைதானத்தில் பார்த்தால் பனி இல்லை. இந்தச் சூழ்நிலை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைத்தது. அவர்கள் பந்தை நன்கு விரல்களால் இறுக்கிப் பிடிக்க முடிந்தது. சுழற்பந்து வீச்சாளர்கள்தான் ஆட்டத்திற்குள் திருப்புமுனையை உண்டாக்கினார்கள். விழுந்த 4 விக்கெட்டுகளும் அவர்கள் எடுத்து தந்தது. இந்த இடத்தில்தான் ரோகித் சர்மா முதல் தந்திரத்தை தவறவிட்டார், அவர் தீபக் ஹூடாவை பந்துவீச அழைத்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து இதுபற்றி பேசிய இர்பான் பதான் ” ஆட்டத்தின் 19-வது ஓவரை அர்ஸ்தீப் வீசி இருக்க வேண்டும். இடது பக்கத்தில் பவுண்டரியின் நீளம் அதிகம். உதவி இருக்கும். இதை நான் ஆட்டம் முடிந்து யோசிக்கவில்லை. ஆட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே நான் கிரிக்கெட் வர்ணனையில் இருந்தேன் அப்பொழுதே கூறினேன். ரோகித் சர்மா இதை இன்னும் கொஞ்சம் சிறப்பாகச் செய்திருக்க முடியும் ” என்று கூறினார்!