நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடர் மார்ச் 22ம் தேதி தொடங்குகிறது. இந்த முறை ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து மைதானங்களிலும் தொடக்க விழாவை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. அதன்படி கொல்கத்தா மைதானத்தில் நடக்கவுள்ள முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கேகேஆர் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது.
தொடக்க விழாவில் பாலிவுட் நடிகை திஷா படானி டான்ஸ் ஆடவிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் கூடுதல் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இம்முறை கொல்கத்தா அணியை பொறுத்த வரை அஜிங்கியா ரஹானே கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு கோப்பையை வென்று கொடுத்த கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயரை அந்த அணி விடுவித்தது.
இதனால் இம்முறை கொல்கத்தா அணியின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். ஆர்சிபி அணியை பொறுத்தவரை இம்முறை ரஜத் பட்டிதார் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சீசன்களை போல் அல்லாமல், இம்முறை ஆர்சிபி அணி பவுலர்களை வாங்க கூடுதலாக தொகையை செலவழித்துள்ளது.
ஹேசல்வுட், புவனேஷ்வர் குமார் உள்ளிட்டோரை பெரிய தொகை கொடுத்து வாங்கி இருக்கிறது. ஸ்பின்னர்கள் இல்லையென்றாலும், குர்ணால் பாண்டியா மற்றும் ஸ்பவ்னில் சிங் உள்ளிட்டோர் வாங்கப்பட்டுள்ளனர். இதனால் ஆர்சிபி அணி இம்முறை மிகப்பெரிய சவாலை எதிரணிகளுக்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே கேகேஆர் – ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி நடக்குமா என்ற சந்தேகம் ரசிகர்கள் இடையில் எழுந்துள்ளது. ஏனென்றால் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானம் அமைந்துள்ள பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் வானிலை ஆய்வு மையமும் மார்ச் 22ல் 70 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் முதல் போட்டி என்பது மிகவும் முக்கியமானதாகும். அந்த போட்டியே மழை காரணமாக ரத்து செய்யப்பட்டால், ரசிகர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்திவிடுவார்கள். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற கணக்காக ஐபிஎல் தொடர் ரசிகர்களின் ஆர்வத்தை திருப்ப நீண்ட நாட்கள் எடுக்கும். இதனால் ஐபிஎல் நிர்வாகம் மழை பெய்யக் கூடாது என்று வேண்டி வருகின்றனர்.