17வது ஐபிஎல் தொடரானது அடுத்த வருடம் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இதில் பத்து அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு விருப்பமான வீரர்களைத் தக்க வைத்துள்ளது.
மேலும் புதிய வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏலம் டிசம்பர் மாதம் 13ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்கள் அதிகத் தொகைக்கு ஏலம் போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணிக்கு விளையாடாத, உள்நாட்டு தொடர்களில் ஜொலித்த, நடக்க இருக்கும் மினியளத்தில் அதிக விலைக்குப் போக வாய்ப்பு இருக்கும் 5 உள்நாட்டு இளம் இந்திய வீரர்களை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
ஷாருக்கான் :
ஆட்டத்தின் இறுதிக்கட்ட ஓவர்களில் ஷாருக்கானின் பவர் ஹிட்டிங் திறன் டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய சொத்தாக உள்ளது. எனவே பல அணிகள் இந்த இளம் திறமையை ஏலம் எடுக்கும். அவர் ஐபிஎல் 2023 இல் 165.96 ஸ்டிரைக்ரேட்டில் 156 ரன்கள் எடுத்தார், குறிப்பாக டிஎன்பி எல் 2023இல், அவர் பந்து வீச்சில் அதிக விக்கெட் எடுத்தவர் ஆவார். இதைப் பார்த்தால், அவர் அணியில் ஆல்ரவுண்டராகவும் பயன்படுத்தப்படலாம்.
அர்ஸ்லான் கான்:
சமீபத்திய விஜய் ஹசாரே டிராபி 2023இல் அர்ஸ்லான் கான் பேட்டிங்கில் அற்புதமான ஃபார்மில் உள்ளார். சண்டிகர் அணிக்கு 5 இன்னிங்ஸ்களில் இரண்டு அரைசதங்கள் மற்றும் இரண்டு சதங்கள் உட்பட 389 ரன்கள் எடுத்தார். அவரது சமீபத்திய ஃபார்மைப் பார்க்கும்போது, ஏலத்தில் ஐபிஎல் அணிகளால் அவர் பரிசீலிக்கப்படலாம்.
பிபின் சௌரப்:
பிபின் சௌரப் சமீபத்தில் நடைபெற்ற சையது முஸ்தாக் அலி டிராபியில் 7 இன்னிங்ஸ்களில் 150.53 ஸ்ட்ரைக்ரேட்டில் 420 ரன்கள் எடுத்து மூன்றாவது அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் உள்ளார். இவரும் ஏலத்தில் அதிகம் கவனிக்கப்படும் வீரராக உள்ளார்.
அதிட் ஷெத்:
2023 சையது முஸ்தாக் அலி டிராபியில் அதிக விக்கெட் எடுத்த இரண்டாவது வீரர் அதித் ஷெத் ஆவார். அவர் சையது முஸ்தாக் அலி டிராபி 2023இல் 7.55 என்ற எகானமி ரேட்டில் 9 இன்னிங்ஸ்களில் 18 விக்கெட்டுகளை எடுத்தார். இது 2024 ஐபிஎல் ஏலத்தின் போது சில அணிகளின் கண்கள் இவர் பக்கம் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சஷாங்க் சிங்:
சஷாங்க் சிங் ஐபிஎல் 2022இல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார், அவர் தனது முதல் இன்னிங்ஸில் குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிரான இன்னிங்ஸின் இறுதி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
ஷஷாங்க் சிங் 2023 விஜய் ஹசாரே டிராபியில் 4 இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்களுடன் 359 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சமீபத்திய பார்ம் மீண்டும் ஐபிஎல் உரிமையாளர்களை ஏலத்தில் அவரை எடுக்கத் தூண்டும்.