இந்த வீரர்களை அணியில் இருந்து வெளியேற்றி மிகப் பெரிய தவறு செய்து விட்டோமென்று புலம்பும் அளவுக்கு அணி உரிமையாளர்களை கதறவிட்ட 5 வீரர்கள்

0
8888
KL Rahul and Suryakamar Yadav

பிசிசிஐ நடத்தி வரும் ஐபிஎல் தொடரில், ஒவ்வொரு 3 வருடமும் ஒரு மெகா ஏலம் நடைபெறும். ஏலத்தில் பங்கு பெறும் அணிகள் அடுத்த மூன்று ஆண்டுகால வருடங்களுக்கு ஏற்றவாறு, தங்களது அணிக்கு தேவையான வீரர்களை ஏலம் எடுப்பார்கள். மெகா ஏலத்தில் அணி உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தங்களது அணியில் சிறப்பாக விளையாடாத வீரர்களை தவிர்த்து, புதிய வீரர்களை விலைக்கு வாங்குவது வழக்கமான விஷயமாகும்.

அப்படி வாங்கப்பட்ட புதிய வீரர்களில் ஒரு சில வீரர்கள் மிக சிறப்பாக விளையாடுவார்கள். மறுப்பக்கம் அந்த புதிய வீரர்கள் மிகப்பெரிய அளவில் கை கொடுக்க மாட்டார்கள். இதே கதை அணியிலிருந்து வெளியிட்ட வீரர்களுக்கும் பொருந்தும். ஒரு அணியிலிருந்து வெளியிடப்பட்ட வீரர்கள் வேறு அணிக்கு சென்று, அங்கே ஜொலித்த கதையும் ஐபிஎல் வரலாற்றில் அரங்கேறியுள்ளது. அப்படி ஒரு அணி மூலமாக தவிர்க்கப்பட்ட வீரர்கள், மற்ற அணிக்கு அற்புதமாக விளையாடிய கதையை தற்போது பார்ப்போம்.

கே எல் ராகுல் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு டூ பஞ்சாப் கிங்ஸ்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் 2018 க்கு முன்பு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வந்தார். அந்த அணியில் அவ்வளவு பெரிய அளவில் கேஎல் ராகுல் ஜொலிக்கவில்லை. அந்த அணியும் அவரை கைவிட்டது. 2018 ஆம் ஆண்டுக்கான ஏலத்தில் கேஎல் ராகுல் பெயர் வந்ததும், பல அணிகள் போட்டி போட்டன. பெங்களூரு அணியும் அந்த போட்டியில் இடம் பெற்றது. நேரம் செல்ல செல்ல தொகை அதிகமானதும், பெங்களூரு அணி பின்வாங்கியது.

இறுதியில் 11 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணியை விலைக்கு வாங்கப்பட்டார். கே எல் ராகுல் 2018ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக 500 ரன்களுக்கு மேல் குவித்து வருகிறார். கடந்த ஆண்டு ஆரஞ்சு கேப்பை கேஎல் ராகுல் வென்றது தனிக்கதை. வீரராக மட்டுமின்றி கேப்டனாகவும் பஞ்சாப் அணியை மிக சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.

பஞ்சாப் அணி தேடி வந்த அந்த ஒரு நல்ல விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் மற்றும் ஒரு நல்ல கேப்டனுக்குகான பணியில் கேஎல் ராகுல் கச்சிதமாக செட் ஆகி விட்ட காரணத்தினால், அடுத்த ஆண்டு பஞ்சாப் அணி இவரை கைவிட வாய்ப்பே இல்லை.

சூர்யகுமார் யாதவ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டூ மும்பை இந்தியன்ஸ்

கொல்கத்தா அணியில் 2018க்கு முன்பாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ், அந்த அணியில் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. மிடில் ஆர்டரில் நன்றாக விளையாட கூடிய அவரை சற்று கீழே இறக்கி அந்த அணி விளையாட வைத்தது. தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் 200 ரன்களுக்கு மேல் கூட அவரால் குவிக்க முடியாமல் போனது.

அதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி மூலமாக மூன்று கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கப்பட்டார். மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அவரை மிடில் ஆர்டரில் நம்பி விளையாட வைத்தது. 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் 400 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தினார். கடந்த இரண்டு வருடங்களில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வெல்ல இவரும் ஒரு முக்கிய காரணமாக விளங்கினார்.

ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடிய இவரை, பிசிசிஐ இந்திய அணியில் விளையாட வைத்து அழகு பார்த்தது. அதுமட்டுமின்றி நடக்க இருக்கின்ற உலக கோப்பை டி20 தொடரிலும் இவர் விளையாட போவது தனிக்கதை. கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் தற்போது, சூரியகுமார் யாதவை நான் கொல்கத்தா அணியில் சரியாக பயன்படுத்தவில்லை என்று தாமாக முன்வந்து கூறியுள்ளார்.

அம்பத்தி ராயுடு – மும்பை இந்தியன்ஸ் டூ சென்னை சூப்பர் கிங்ஸ்

எவ்வளவு பெரிய சாம்பியன் அணியாக இருந்தாலும் ஒரு தவறை அந்த அணியால் செய்யாமல் இருக்க முடியாது. அப்படி மும்பை இந்தியன்ஸ் அணி செய்த ஒரு தவறு என்றால் இதை நிச்சயமாக நாம் கூறலாம். அம்பத்தி ராயுடு மும்பை இந்தியன்ஸ் அணியில் மிடில் ஆர்டர் வரிசையில் நெருக்கடியான நேரத்தில் நன்கு விளையாட கூடிய ஒரு வீரர். இருப்பினும் அவரை 2017ஆம் ஐபிஎல் தொடருக்கு பின்னர் அந்த அணி அவரை வாங்க முன்வரவில்லை.

2018 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 2 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு ராயுடு வாங்கப்பட்டார். சென்னை அணிக்காக முதல் முறையாக 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடிய அம்பத்தி ராயுடு, அந்தாண்டு ருத்ரதாண்டவம் ஆடினார் என்று தான் கூற வேண்டும். அந்தத் தொடரில் 602 ரன்கள் குவித்து, சென்னை அணி தொடரை வெல்ல மிகப்பெரிய அளவில் கைகொடுத்தார்.

தற்பொழுதும் சென்னை அணியில் மிடில் ஆர்டர் வரிசையில் நெருக்கடியான சமயத்தில் ராயுடு அதிரடியாக விளையாடி வருகிறார். அம்பத்தி ராயுடுவை மும்பை இந்தியன்ஸ் அணி கை விடாமல் இருந்திருந்தால், நடப்பு ஐபிஎல் தொடரில் அந்த அணி சிரமப்பட வாய்ப்பில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

ராகுல் திரிபாதி – ராஜஸ்தான் ராயல்ஸ் டூ கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை 2018க்கான ஐபிஎல் தொடர் ஏலத்தில் விலைக்கு வாங்கியது. சரியான இடத்தில் இவரை களம் இறக்காத காரணத்தினால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ராகுல் திரிபாதியால் அவ்வளவு சிறப்பாக விளையாட முடியாமல் போனது.அந்த அணிக்காக 20 போட்டிகளில் மட்டுமே ராகுல் திரிபாதி விளையாடிய நிலையில், மிகப்பெரிய தவறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2019ஆம் ஆண்டு செய்தது. அந்த ஆண்டு முடிந்ததும் அவரை தனது அணியில் இருந்து ராஜஸ்தான் நிர்வாகம் வெளியேற்றியது.

2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூலமாக 60 லட்ச ரூபாய்க்கு ராகுல் திரிபாதி விலைக்கு வாங்கப்பட்டார். மிகக் குறைவான விலைக்கு ஏலம் போன ராகுல் திரிபாதி தற்பொழுது கொல்கத்தா அணியில் அற்புதமாக விளையாடி வருகிறார். குறிப்பாக நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் 400 ரன்களை நெருங்கிக் கொண்டிருக்கிறார். கொல்கத்தா அணியின் தவிர்க்க முடியாத மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக தற்போது ராகுல் திரிபாதி ஜொலித்து வருகிறார்.

வருன் – சக்கரவர்த்தி பஞ்சாப் கிங்ஸ் டூ கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

2019 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி 8 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு வருன் சக்கரவர்த்தியை விலைக்கு வாங்கியது. அவ்வளவு பெரிய தொகைக்கு விலை போன அவர், அந்த ஆண்டு ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். கொல்கத்தா அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் மூன்று ஓவர் மட்டும் வீசி 35 ரன்கள் கொடுத்து, ஒரு விக்கெட்டை வருன் கைப்பற்றினார்.

சரியான வாய்ப்பு கொடுக்காத பஞ்சாப் அணி, அவரை அந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்ததும் தனது அணியில் இருந்து அதிரடியாக வெளியேற்றியது. அதன்பின்னர் 2020ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வருன் சக்கரவர்த்தியை 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட வருன் சக்கரவர்த்தி, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 17 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன் காரணமாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பும் அவரைத் தேடி வந்தது தனிக்கதை.

நடப்பு ஐபிஎல் தொடரில் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி வரும் வருன் சக்கரவர்த்தி, உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணியில் விளையாட போவதும் குறிப்பிடத்தக்கது.