“ஐபிஎல்.. ஹர்திக் பாண்டியா இடத்துக்கு.. இந்த 23 வயசு பையனே போதும்!” – ஆச்சரியப்படுத்திய இர்பான் பதான்!

0
1196
Irfan

16 வருட ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய டிரேடிங்காக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ட்ரேட் செய்யப்பட்டது அமைந்திருக்கிறது.

கேப்டன், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், வேகப்பந்துவீச்சாளர் என முப்பரிமாணங்களில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா மிகப்பெரிய தூணாக இருந்தார்.

- Advertisement -

இப்படிப்பட்ட ஒரு வீரர் அணியிலிருந்து விலகும் பொழுது, அந்த அணியின் சமநிலை மிக அதிகமாக பாதிக்கப்படும். இப்படியான வீரர்களை ஒரு அணியில் இருந்து உருவி விட்டால், அந்த மொத்த அணியுமே சரியும்.

எனவே ஹர்திக் பாண்டியா இடத்தில் யாரைக் கொண்டு வந்து நிரப்பினால் மிகச் சரியாக இருக்கும் என்று கிரிக்கெட் உலகில் பலவாறான யோசனைகள் கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் வல்லுனர்களிடம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இர்பான் பதான் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் வீரரை ஹர்திக் பாண்டியா இடத்துக்கு குறிப்பிட்டு ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து இர்பான் பதான் கூறும்பொழுது ” குஜராத் டைட்டன்ஸ் அணியை பார்த்தால் அவர்கள் ஹர்திக் பாண்டியாவை இழந்து விட்டார்கள். வெளிப்படையாக பார்த்தால் அவர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமமாக செயல்படக்கூடிய ஒரு கேப்டனை இழந்து விட்டார்கள். ஹர்திக் பாண்டியாவை ஈடுகட்ட ஏலத்தில் எந்த வீரர் இருக்கிறார்?

ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் 23 வயதான அசமத்துல்லா ஓமர்ஸாய் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு செல்வதை நான் பார்க்கிறேன்.

அதே அணியில் ரஷித் கான் இருக்கிறார். அவரால் தன் நாட்டவரிடம் இருந்து சிறந்ததை பெற்றுக் கொள்ள முடியும். மேலும் அந்த அணிக்கு சரியான வேகப்பந்துவீச்சாளர்கள் தேவை. அவர்களிடம் வீரர்களை வாங்கும் அளவுக்கு தேவையான பணமும் இருக்கிறது!” என்று கூறி இருக்கிறார்!

இர்பான் பதான் கூறிய இந்த ஆப்கானிஸ்தான் இளம் வீரர் நடந்து முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஒன்பது போட்டிகளில் 353 ரன்கள் மற்றும் 9 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். அதே சமயத்தில் குஜராத் அணியிடம் 30 கோடிக்கு மேல் கையில் பணம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!