இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று இருக்கிறது. இந்தப் போட்டியில் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்ட சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார். மேலும் போட்டி குறித்து அவர் பேட்டி அளித்திருக்கிறார்.
இன்று டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு நல்ல துவக்கம் கிடைக்கவில்லை. ஆனாலும் உள்ளே வந்ததிலிருந்து சூரியகுமார் யாதவ் பாசிட்டிவான பேட்டிங் வெளிப்படுத்தினார். இந்திய அணி ஓரளவுக்கு நல்ல நிலையை எட்டிய பொழுது ரிஷப் பண்ட் மற்றும் சிவம் துபே குறிப்பிட்ட நேரத்தில் வெளியேறினார்கள்.
இதன்பிறகு சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாக 37 பந்தில் 60 ரன்கள் சேர்த்தார்கள். சூரியகுமார் யாதவ் 28 பந்துகள் மட்டுமே சந்தித்து 53 ரன்கள் குவித்தார். பேட்டிங் செய்ய கடினமான இந்த ஆடுகளத்தில் அவருடைய ஆட்டம் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது.
இந்தியா அணி முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது. இதன்பிறகு இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 134 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது சூரியகுமார் யாதவுக்கு கொடுக்கப்பட்டது.
ஆட்டநாயகன் விருது வென்று பேசிய சூர்யாகுமார் யாதவ் “இதில் நிறைய கடின உழைப்பு இருக்கிறது மேலும் நிறைய பிராசஸ் மற்றும் வழக்கமான வேலைகள் எனநிறைய வருகிறது. நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் மனதில் தெளிவாக இருக்கிறேன். இந்த ஆட்டநாயகன் விருதை ஒரு பவுலருக்கு கொடுப்பதில் கவலை இல்லை. ஆனால் இந்திய அணி விளையாடிய போட்டிகளில் இப்பொழுதுதான் முதல் முறையாக பேட்ஸ்மேனுக்கு வருகிறது.
இதையும் படிங்க : 20 பந்தில் 0 ரன்.. ஆப்கான் பேட்ஸ்மேன்களை அலறவிட்ட பும்ரா.. இந்தியா பெருமையை தக்கவைத்து அசத்தல் வெற்றி
முதலில் நீங்கள் உங்களுடைய விளையாட்டு திட்டத்தை தெரிந்து கொள்ள வேண்டும் பிறகு அதற்கு ஏற்றபடி விளையாட வேண்டியது முக்கியம். ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்ய வந்த பொழுது நான் என்ன சொன்னேன் என்று எனக்கு நினைவில் இருக்கிறது. நாம் தொடர்ந்து இதே வேகத்தில் பெடலை அழுத்தி அதிரடியாக விளையாடுவோம். இறுதியில் 180 ரன்கள் வந்தால் மகிழ்ச்சியாக இருப்போம் என்று கூறினேன். கடைசியில் நாங்கள் அதையே செய்தோம்” என்று கூறி இருக்கிறார்.