தற்பொழுது ஜார்க்கண்ட் ராஞ்சி மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் முதலில் டாசில் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்திருக்கிறார்.
டாஸ் வென்ற ஸ்டோக்ஸ் ஆரம்பத்தில் பேசும் பொழுது, ஆடுகளம் எப்படி இருக்கிறது என்று புரியவில்லை, இதன் காரணமாக நாங்கள் முதல் ஒரு மணி நேரம் பார்த்து விளையாடுவோம் என்பதாக பேசி இருந்தார்.
இதற்கு ஏற்றபடி ஆடுகளத்திலும் ஒரு பந்து தாழ்வாகவும் ஒரு பந்து எகிறியும் வந்து கொண்டிருக்கிறது. மேலும் இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜாக் கிரவுலி தடுமாற்றமாகவே ஆரம்பித்தார்.
இந்த நிலையில் இந்தப் போட்டியின் இந்திய அணியில் அறிமுக வீரராக களம் இறங்கி இருக்கும் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் இரண்டாவது ஓவருக்கு பந்து வீச வந்தார்.
ஆகாஷ் தீப் தன்னுடைய முதல் ஸ்பெல்லில் விக்கெட்டில் பந்து பட்டு உள்ளே செல்லும் சிறப்பான பந்து ஒன்றை ஜாக் கிரவுலிக்கு வீச, ஆப் ஸ்டெம்ப் காற்றில் பறந்தது.
அறிமுக டெஸ்ட் போட்டியில் அசத்தலாக ஒரு விக்கெட் கிடைத்த மகிழ்ச்சியில் அவரோடு சேர்த்து மைதானமே ஆர்ப்பரிக்க, நோ-பாலுக்கான சைரன் மைதானத்தில் ஒலிக்க ஆரம்பித்தது. இறுதியில் அந்தப் பந்தை கிரீசுக்கு வெளியில் கால் வைத்து ஆகாஷ் தீப் வீசிவிட்டார்.
இதையும் படிங்க : இந்திய அணியில் மீண்டும் ஒரு வீரருக்கு வாய்ப்பு.. பென் ஸ்டோக்ஸ் வைத்த ட்விஸ்ட்
இதனால் தன்னுடைய சர்வதேச முதல் விக்கெட்டுக்கு அவர் மேலும் காத்திருக்க வேண்டியதாக மாறி இருக்கிறது. ஆனாலும் அவர் பந்து வீசும் முறை நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.