ஊசி போடுங்கள் என்னமோ செய்யுங்கள் ; நான் இன்று விளையாடியே தீரவேண்டும் – சூரியகுமாரின் பிடிவாதம்!

0
5411
Suryakumaryadav

இந்திய அணியின் ஏபி. டிவிலியர்ஸ் ஆக சூர்யகுமார் யாதவ் விளங்கி வருகிறார். பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் களம் இறங்கி விடப்பட்டாலும் அசத்துவது மட்டுமல்லாமல், மைதானத்தின் எல்லா இடங்களிலும் அடித்து அசத்துகிறார். இவரை பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்துவது என்பது கற்பனையானது. ஆட்டத்தில் இவர் ஏதாவது தவறு செய்து ஆட்டம் இழந்தால்தான் உண்டு. அந்த அளவில் மிகச் சிறப்பான பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். இவரது பேட்டிங் தொழில்நுட்பம் தற்போது உலகில் எந்த கிரிக்கெட் வீரர் இடமும் கிடையாது. இவரது ஸ்வீப் மற்றும் பிளிக் ஷாட்கள் மிகவும் தனித்துவமானது. இது அவரை மற்ற எந்த பேட்ஸ்மேன்களையும் விட மிக அபாயகரமான பேட்ஸ்மேனாக மாற்றுகிறது!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கையில் ஏற்பட்ட காயத்தால் சில போட்டிகளை தவறவிட்ட இவர் விளையாட முடியாமல் போனது, மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மும்பை அணிக்கு சிறப்பாக அமையவில்லை. அதற்கு அடுத்து இங்கிலாந்து சென்ற சூர்யகுமார் யாதவ் டி20 போட்டியில் தனது முதல் சதத்தை அடித்து அசத்தினார். மேலும் அங்கிருந்து வெஸ்ட் இண்டீஸ் சென்ற அவர் துவக்க ஆட்டக்காரர் ஆகவும் டி20 போட்டியில் அசத்தினார். ஆசிய கோப்பை தொடரிலும் அவரிடமிருந்து அற்புதமான ஆட்டம் வெளிப்பட்டது.

- Advertisement -

இதற்கடுத்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்தியா வந்த ஆஸ்திரேலியா அணியுடனான, தொடரை யாருக்கு என்று முடிவு செய்யும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் விராட் கோலியுடன் இணைந்து இவர் அமைத்த 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அணியின் வெற்றிக்கு மிக முக்கியமாக அமைந்தது. அந்தப் போட்டியில் 35 பந்துகளில் 69 ரன்களை 5 பவுண்டரிகள் 5 சிக்சருடன் அடித்து அசத்தினார். இந்த ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.

ஆனால் இந்த ஆட்டத்திற்கு முன்பாக அவரது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருந்திருக்கிறது. ஆனால் தொடரை முடிவுசெய்யும் இறுதிப்போட்டி என்பதால், அதைத் தவற விடக்கூடாது என்று சூரியகுமார் முடிவு செய்திருக்கிறார். பின்பு மருத்துவர்களிடமும் பிசியோதெரபிஸ்ட் இடமும் சென்று மிக உறுதியாக சொல்லி, எப்படியாவது ஆடுவதற்கு தயார் செய்யுமாறு கேட்டு இருக்கிறார். அதற்குப்பின் வந்துதான் இந்தியாவிற்கு வெற்றிக்கான ஆட்டத்தை ஆடிக் கொடுத்திருக்கிறார்.

இதுபற்றி சூரியகுமார் கூறும்பொழுது
” நாங்கள் தொடர்ச்சியாக பயணத்திலும் இருந்தோம். அதேசமயத்தில் வானிலையிலும் மாற்றம் இருந்தது. எனக்கு அதனால் கடுமையான வயிற்று வலியும், போட்டி அன்று காலை காய்ச்சலும் இருந்தது. நான் என் பிசியோ மற்றும் மருத்துவரிடம் சொன்னேன், இது உலகக் கோப்பை இறுதிப் போட்டியாக இருந்தால் என்ன செய்ய முடியும்? என்று. நான் உடம்பு முடியவில்லை என்று சொல்லிவிட்டு சும்மா இருக்க மாட்டேன். அதனால என்ன வேணா பண்ணுங்க. என்ன மாத்திரை வேணா கொடுங்க என்ன ஊசி வேணா போடுங்க. என்னை ஆட்டத்துக்கு ரெடி பண்ணுங்க. ஒரு முறை மேட்சுக்கு போய் இந்திய ஜெர்சியை அணிந்து களத்திற்குள் நிற்பது அந்த உணர்வு தனியானது ” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய அவர் ” போட்டியில் நான் எப்படி பேட்டிங் செய்ய விரும்புகிறேனோ, அதே போல்தான் பயிற்சியிலும் செய்கிறேன். நான் எனக்கு ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொள்கிறேன் ; போ போய் உன்னை வெளிப்படுத்து என்பதே அது. நான் 75% வெற்றியாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். நன்றாக விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். அதை முதலில் செய்கிறேன். பின்பு ஆட்டத்தை முடித்து வைக்க நினைக்கிறேன். அதைச் செய்ய முயற்சிக்கிறேன் ” என்று கூறியிருக்கிறார்.