இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வருகிற 27ஆம் தேதி முதல் நடைபெற இருக்கின்றன. இந்த நிலையில் இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் சுப்மான் கில் உலகக் கோப்பைக்கு முன்பாக தனது செயல்பாடுகள் குறித்தும், இனி தான் விளையாடப் போகும் விதம் குறித்தும் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
சுப்மான் கில் சமீபத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டு அவரது தலைமையில் இந்திய அணி டி20 தொடரை வென்றது.
இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இவரை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் துணை கேப்டன் ஆகவும் மாற்றி இருக்கிறது. டி20 உலக கோப்பைக்கு முன்பாக கில்லின் செயல்பாடுகள் குறிப்பிடும்படி அமையாததால் அவரை ரிசர்வ் வீரராகவே டி20 உலக கோப்பைக்கு அனுப்பியது.
இருப்பினும் அந்தத் தொடரில் முழுவதுமாக பங்கு பெறாமல் பாதியிலேயே இந்தியா திரும்பினார். அதற்குப் பிறகு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டார். இந்த சூழ்நிலையில் டி20 உலக கோப்பைக்கு முன்பாக தனது செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்பதை ஒப்புக் கொண்ட கில், இனி எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப விளையாடப் போவதாக கூறி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “டி20 உலக கோப்பைக்கு முன்பாக எனது செயல்பாடுகள் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி அமையவில்லை. இனி வரவுள்ள 30 முதல் 40 போட்டிகளில் அணியில் ஒரு பேட்ஸ்மேன் ஆக என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன். என்னுடன் ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி விளையாடும் போது எங்களது பேட்டிங்கை நாங்கள் மிகவும் ரசிக்கிறோம். குறிப்பாக நாங்கள் விளையாடும் போது அடிக்கப்படும் ஒரு குறிப்பிட்ட ஷாட்கள் எங்களை முழுமையடைய வைக்கிறது.
இதையும் படிங்க:ரோகித் கோலி கோரிக்கையை புறக்கணிக்கும் பிசிசிஐ?.. ஆல் ரவுண்டர்களுக்கு மீண்டும் பிரச்சனை.. புதிய தகவல்கள்
இடது மற்றும் வலது தொடக்க ஆட்டக்காரர்களாக இருப்பது அணிக்கு மிகவும் நல்லது. நாங்கள் நல்ல பாட்னர்ஷிப்களை வைத்திருக்கிறோம். நாங்கள் இருவரும் சேர்ந்து இரண்டு முறை 150 ரன்களுக்கு மேல் குவித்து இருக்கிறோம் என்று நினைக்கிறேன். எங்களுக்குள் ஆன புரிதலும் மிகவும் நன்றாக இருக்கிறது. நாங்கள் ரசித்து விளையாடுகிறோம். எங்களுக்கும் பயிற்சியாளர் குழுவுக்கும் இடையே ஆன தொடர்பு முன்பு போலவே உள்ளது. நாங்கள் உலக சாம்பியன் அணி. புதிய பயிற்சியாளர் மற்றும் துணை பயிற்சியாளர்களோடு சேர்ந்து அணியை இன்னும் வெற்றி பாதைக்கு நகர்த்துவோம்” என்று கூறி இருக்கிறார்.