இந்திய அணியின் வெஸ்ட் இன்டீஸ் சுற்றுப்பயண தேதிகள் & இடம் அறிவிப்பு

0
779
India tour of West Indies 2022

மார்ச் 26ஆம் தேதி துவங்கிய ஐ.பி.எல் பதினைந்தாவது சீஸன் பரப்பரப்பாக நடந்து கொண்டிருக்க, லீக் சுற்று போட்டிகள் 70% முடிவடைந்திருக்கிறது. மீதமுள்ள லீக் போட்டிகள், ப்ளேஆப்ஸ், இறுதிபோட்டி என ஐ.பி.எல் மே மாதம் 26ஆம் தேதி முடிய இருக்கிறது.

இந்த ஐ.பி.எல் கிரிக்கெட் தீ அணைந்ததுமே அடுத்தடுத்து இந்திய அணிக்கு சர்வதேச தொடர்கள் வரிசையில் காத்திருக்கின்றன. ஐ.பி.எல் தொடருக்குப் பிறகு இந்திய அணி வீரர்களுக்கு ஒரு வாரம் குடும்பத்தோடு இருக்க நேரம் கிடைப்பதே கடினம்தான்.

- Advertisement -

ஐ.பி.எல் தொடர் மே-26ஆம் தேதி முடியு நிலையில் அடுத்து ஜூன் முதல் வாரத்திலேயே தென் ஆப்பிரிக்கா ஐந்து 20/20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்தியா வருகிறது. இந்தத் தொடர் ஜூன் 9ஆம் தேதி ஆரம்பித்து ஜூன் 19ஆம் தேதி முடிகிறது. இதற்கடுத்து உடனே இதே மாதத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக, முதலில் அயர்லாந்துடன் இரண்டு 20/20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் கடந்த வருட டெஸ்ட் தொடரில் மீதம் வைத்திருக்கும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதோடு, தலா மூன்று 20/20 போட்டிகள், ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுகிறது. இந்த இங்கிலாந்து சுற்றுப்பயணம் ஜூலை 17ஆம் தேதி முடிவடைகிறது.

தற்போது இதற்கடுத்த தொடராக, இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள், ஐந்து 20/20 போட்டிகள் விளையாட வெஸ்ட் இன்டீஸ் செல்கிறது என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை ஜூலை 17ஆம் தேதி முடிக்கும் இந்திய அணி அப்படியே அங்கிருந்தே வெஸ்ட் இன்டீசிற்கு பறக்கிறது.

இந்த வெஸ்ட் இன்டீஸ் சுற்றுப்பயணத்தில் முதல் மூன்று ஒரு நாள் போட்டிகள், அடுத்து ஐந்து 20/20 போட்டிகள் கொண்ட தொடர்களில் இந்திய அணி விளையாடுகிறது. கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக, முதல் மூன்று ஒருநாள் போட்டிகளும் ஜூலை 22ல் ஆரம்பித்து ஜூலை 27ல், டிரினிடாட் குயின்ஸ்பார்க் ஓவல் மைதானத்திலேயே நடந்து முடிகிறது. அடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட 20/20 தொடரின் முதல் போட்டி, ஜூலை 29 பிரையன் சார்லஸ் லாரா கிரிக்கெட் மைதானத்திலும், அதற்கடுத்த இரண்டு போட்டிகள் வார்னர் பார்க் செய்ன்ட் கிட்ஸிலும், நெவிசிலும், ஆகஸ்ட் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் நடக்கிறது. மீதம் இரண்டு 20/20 போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தில், ஆகஸ்ட் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நடக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது!

- Advertisement -