இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஐசிசி தொடரில் சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி, ஓரளவு நன்றாக விளையாடி இந்திய அணிக்கு எதிராக 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணியை பொறுத்த வரை அந்த அணியின் தொடக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் 33 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர் என 39 ரன்கள் குவித்து வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பின்னர் அந்த அணியின் கேப்டன் ஸ்மித் 73 ரன்கள் குவித்தார்.
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கிய நிலையில், அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா 29 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் என 28 ரன்கள் குவித்து எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்து வெளியேறினாலும், இந்திய அணியின் சேஸ் மாஸ்டர் விராட் கோலி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரோடு பாட்னர்ஷிப் அமைத்த ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாட, இறுதி கட்டத்தில் ஹர்திக் பாண்டியா 3 சிக்சர்கள் அடிக்க இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலமாக நான்கு ஐசிசி தொடர்களில் இறுதி போட்டிக்கு இந்திய அணியை அழைத்துச் சென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா படைத்திருக்கிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணியை அழைத்துச் சென்ற ரோகித் சர்மா, அந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவினார்.
இதையும் படிங்க:என்னோட டீம்ல இந்த வசதி இருக்கணும்னு.. அப்பவே முடிவு செஞ்சேன்.. அதுக்குதான் கைமேல் பலன் – கேப்டன் ரோஹித்
இருப்பினும் அதே ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பையில் இந்திய அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணியை சாம்பியன் ஆக்கினார். மேலும் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அரையிறுதியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.