தற்போது இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் புதிய கூடுதல் பேட்டிங் பயிற்சியாளராக சிதான்சு கோடக் பொறுப்பேற்று இருக்கிறார். தற்போது அவர் மூன்றாவது டி20 போட்டியில் முகமது ஷமி விளையாடுவாரா? என்பது குறித்து கூறியிருக்கிறார்.
தற்போது இந்தியா வந்திருக்கும் இங்கிலாந்து அணி முதலில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் நடந்து முடிந்திருக்கும் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது டி20 போட்டி நாளை குஜராத் ராஜ்கோட் மைதானத்தில் நடக்க இருக்கிறது.
சூர்யா குமார் – கம்பீர் திட்டம்
இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் இரண்டாவது டி20 போட்டி முடிவுக்கு பிறகு இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் ஒரு ஆல் ரவுண்டர் இருக்க வேண்டும் எனவும், அவர் இரண்டு அல்லது மூன்று ஓவர்கள் பந்து வீசக்கூடிய அளவில் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாகவே முதல் டி20 போட்டியில் நிதீஷ் குமார் ரெட்டியும், அவர் இரண்டாவது டி20 போட்டியில் காயமடைந்து வெளியேறியதால் அந்த இடத்தில் வாஷிங்டன் சுந்தரையும் இந்திய அணி நிர்வாகம் விளையாட வைத்தது. மேலும் மூன்று சுழல் பந்துவீச்சாளர்களுடன் விளையாட விரும்புவதால், அர்ஸ்தீப் சிங் மட்டுமே ஒரே வேகப்பந்து வீச்சாளராக இருக்கிறார்.
முகமது ஷமி விளையாடுவாரா?
இந்த நிலையில் இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக பொறுப்பேற்று இருக்கும் சிதான்சு கோடக் முகமது ஷமி மூன்றாவது டி20 விளையாடுவாரா என்பது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொண்டு பதில் அளித்து இருக்கிறார்.
இதையும் படிங்க : ஹர்திக் அந்த விஷயத்துக்கு பயந்தார்.. இப்ப நான் நினைச்சது நடக்குது – ஜாகிர் கான் பேட்டி
இது குறித்து அவர் கூறும் பொழுது “முகமது ஷமி முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். எஞ்சி இருக்கின்ற திட்டங்களை வைத்து பார்க்கும் பொழுது கண்டிப்பாக ஒரு திட்டம் உள்ளது. அடுத்து ஒருநாள் போட்டிகள் வர இருக்கின்றன. இதன் காரணத்தால் முகமது ஷமி விஷயத்தில் தலைமை பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன் சூரியகுமார் யாதவ் இருவரும் முடிவு எடுப்பார்கள். ஆனால் நிச்சயமாக முகமது ஷமிக்கு உடல் தகுதியில் எந்த பிரச்சனையும் இல்லை. அவரது பணிச்சுமையை எப்படி நிர்வகிக்கலாம்? என்பது குறித்து தான் ஆலோசனை செல்கிறது” என்று கூறியிருக்கிறார்.






