இந்திய அணியின் முன்னாள் வீரரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளருமான ஜாகிர் கான் ஹர்திக் பாண்டியா தற்பொழுது ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் முன்னேற்றம் அடைந்திருப்பது குறித்து பேசி இருக்கிறார்.
கடந்த ஆண்டு ஹர்திக் பாண்டியாவுக்கு கிரிக்கெட் வாழ்க்கையும் தனிப்பட்ட வாழ்க்கையும் மிகவும் மோசமானதாக அமைந்திருந்தது. அதே சமயத்தில் நடந்த எல்லா விஷயங்களில் இருந்தும் வெளிவந்து டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்து கடந்த ஆண்டிலேயே சாதிக்கவும் செய்தார்.
மீண்டும் ஆரம்பித்த பிரச்சனை
2024 டி20 உலகக் கோப்பை தொடரை வெல்வதற்கு துணை கேப்டனாகவும் ஆல்ரவுண்டராகவும் பெரிய பொறுப்பை ஹர்திக் பாண்டியா வகித்தார். எனவே ரோஹித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற காரணத்தினால், ஹர்திக் பாண்டியா இயல்பாகவே அடுத்து கேப்டனாக வருவார் என்று பலரும் நம்பி எதிர்பார்த்து இருந்தார்கள்.
ஏற்கனவே பல பிரச்சனைகளில் இருந்த ஹர்திக் பாண்டியாவுக்கு மேலும் பெருத்த ஏமாற்றமாக அவருக்கு இந்திய டி20 அணியின் கேப்டன் பதவி மறுக்கப்பட்டது. சூரியகுமார் யாதவுக்கு அந்த பதவி கொடுக்கப்பட்டது. மேலும் தற்போது துணை கேப்டனாக அக்சர் படேல் கொண்டுவரப்பட்டு துணை கேப்டன் பொறுப்பும் பறிக்கப்பட்டிருக்கிறது. இருந்த போதிலும் அவர் முன்பை விட உற்சாகமாக செயல்பட்டு வருகிறார்.
ஹர்திக் பாண்டியா மீண்டு வந்து விட்டார்
இதுகுறித்து ஜாகிர் கான் பேசும்பொழுது “நாங்கள் பல நாட்களாக சொல்லி வருவது ஒரே விஷயம்தான். ஹர்திக் பாண்டியா வந்து வீச்சில் சிறப்பான முறைக்கு திரும்பி வந்தால், இந்திய அணியின் பேலன்ஸ் மிகச் சிறப்பானதாக மாறிவிடும் என்பது தான் அது. அவர் காலப்போக்கில் சொந்த பிரச்சினைகளுடன் போராடினார். காயங்கள் மற்றும் முதுகுப் பகுதியில் அவருக்கு இருந்த பிரச்சனையின் காரணமாக, பந்து வீச்சில் ஒரு பெரிய பங்களிப்பை கொடுப்பதற்கு அவருக்கு பயத்தை உண்டாக்கியது”
“ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவர் தற்பொழுது அணிக்காக பந்துவீச்சில் தான் கொடுக்க வேண்டிய பங்களிப்பு குறித்து புரிந்து கொண்டிருக்கிறார். மேலும் அவர் அந்த பொறுப்பை எடுத்துக் கொண்டிருக்கிறார். இதுதான் இங்கு மிகவும் முக்கியமானது”
இதையும் படிங்க : ஜெய்ஸ்வாலுக்கு யாரும் செய்யாததை ரோகித் சர்மா செஞ்சார்.. அவருக்கு ரொம்ப நன்றி – சுரேஷ் ரெய்னா பேட்டி
“தற்போது அவருடைய பந்துவீச்சு புள்ளிவிபரம் சிறப்பாக மாறி இருக்கிறது. காலப்போக்கில் அவர் தன்னுடைய முக்கியத்துவத்தை பந்துவீச்சில் உணர்ந்து விட்டார். அவர் ஒரு தொடருக்கு எப்படி தயாராகிறார் என்பது இதை வெளிப்படையாக காட்டுகிறது. தற்போது பந்துவீச்சில் அவரது ரோலை அவர் நெகட்டிவாக பார்ப்பதில்லை. இதன் காரணமாகவே அவரை இந்திய அணி நிர்வாகம் 3 ஸ்பின்னர்களை வைத்துக்கொண்டு இரண்டாவது வேகப்பந்துவீச்சாளராக பார்க்கும் அளவுக்கு வந்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.






