2வது டெஸ்ட் போட்டி வெற்றிக்கு பிறகு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியாவின் நிலை என்ன? பைனலுக்கு தகுதிபெற இனி என்ன செய்ய வேண்டும்?

0
10942

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற இனி என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்ப்போம்.

வங்கதேசம் அணியுடன் விளையாடிய டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. டிசம்பர் 22ஆம் தேதி மிர்பூர் மைதானத்தில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நான்காம் நாள் வரை சென்ற ஆட்டம் இறுதியில் இந்திய அணிக்கு சாதகமாகவே அமைந்தது.

அஸ்வின் மற்றும் ஸ்ரேயாஷ் ஐயர் இருவரின் உதவியாளல் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது. இதன் மூலம் 58.93 சதவீதம் வெற்றிகளுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கின்றது.

இந்த இரண்டாம் இடத்தை தக்க வைத்துக் கொள்ளவும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறவும் இந்திய அணிக்கு என்னென்ன சாதகமாக நடக்க வேண்டும்? அடுத்து வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி எத்தகைய வெற்றியை பெறவேண்டும்? என்பதைப் பற்றிய விவரங்களை இங்கே பார்ப்போம்.

தென்னாபிரிக்கா – ஆஸ்திரேலியா தொடர்

ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிவரும் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி 3-0 என தொடரை கைப்பற்றினால், அடுத்து நடைபெறவிருக்கும் இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இந்திய அணி குறைந்தபட்ச வித்தியாசத்தில் தொடரை கைப்பற்றினால் போதுமானது.

ஒருவேளை தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியா தொடரில் ஒரு வெற்றியை பெற்றறால், அடுத்து நடைபெறவிருக்கும் தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டையும் தென்னாபிரிக்கா கைப்பற்ற வேண்டும். இல்லையெனில் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும்.

இந்தியா-ஆஸ்திரேலியா தொடர்

இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இந்தியா 3-1 அல்லது 3-0 அல்லது 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றால் போதுமானது.

தென்னாப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியா அணியுடன் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால், இந்திய அணி கட்டாயம் 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியாக வேண்டும். 2-0 என வெல்லும் பட்சத்தில், அது தென் ஆப்பிரிக்கா இரண்டாவது இடத்திற்கும் முன்னேற அதிக வாய்ப்பாக அமையும்.

அதே சமயம் தென் ஆப்பிரிக்கா அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடைபெறும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஏதேனும் ஒரு போட்டியில் டிரா செய்தால், இந்திய அணிக்கு கூடுதல் வாய்ப்பிருக்கும்.