இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா என்பது குறித்து இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென் டஸ்கேட் கூறியிருக்கிறார்.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாளை துபாய் மைதானத்தில் லீக் சுற்றின் கடைசிப்போட்டி நடைபெறுகிறது. ஏற்கனவே இரண்டு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டதால் இந்தப் போட்டி எந்தவித தாக்கத்தையும் அடுத்த சுற்றில் ஏற்படுத்தாது.
தற்போது சாம்பியன்ஸ் டிராபிக்கு முதன்மை விக்கெட் கீப்பராக இந்திய அணியில் ரிஷப் பண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இரண்டாவது விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்ட கேஎல்.ராகுல் தொடர்ந்து வாய்ப்பு பெற்று விளையாடுகிறார். முதன்மை விக்கெட் கீப்பருக்கு அணியில் இடம் கொடுக்காதது தொடர்ந்து கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
இதேபோல நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என்றும், முதன்முறையாக இந்திய அணியை கேப்டனாக இருந்து கில் வழிநடத்துவார் என்றும் கூறப்பட்டது.
இதுகுறித்து ரியான் டென் டஸ்கேட் கூறும்பொழுது “ரோஹித் சர்மா நலமாக இருக்கிறார். இது அவருக்கு ஏற்கனவே ஏற்பட்ட காயம்தான். எனவே இதை எப்படி நிர்வகிப்பது என்பது அவருக்கு தெரியும். நாங்கள் அரை இறுதிக்கு எங்களுடைய சிறந்த வீரர்களுடன் செல்வதுதான் முக்கியமானது என்று நினைக்கிறேன். இருந்தபோதிலும் யாருக்கும் ஓய்வு கொடுக்கும் எண்ணம் எங்களுக்கு கிடையாது”
“பந்து வீச்சில் இருக்கும் வேலையை சிலருக்கு பிரித்துக் கொடுக்கலாம். இருந்த போதிலும் நியூசிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெறவும், புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கவும், தொடர்ந்து வெற்றியை எடுத்துச் செல்லவுமே நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் அணியின் சமநிலை பற்றி மட்டும்தான் சிந்திக்க முடியும்”
இதையும் படிங்க : இந்திய அணி ஒரே மைதானத்தில் ஆடுதா.. கவலையே இல்லை.. நாங்க யாரு திட்டம் என்னனு தெரியும் – நியூசி வீரர் கருத்து
“ரிஷப் விளையாடாதது வருத்தம் அளிக்கிறது. ஆனால் இந்த மட்டத்தில் கிரிக்கெட்டில் இது இயல்பானதுதான். கேஎல்.ராகுல் தொடர்ந்து நன்றாக செயல்படுகிறார். எனவே அவருக்கான வாய்ப்பு கிடைக்கிறது. ரிஷப் பண்ட்டும் தொடர்ந்து விளையாட வேண்டியவர். அவர் எப்போது தேவைப்படுவார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இப்படி இரண்டு சிறந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள் அணியில் இருப்பது நல்ல விஷயம்” என்று கூறியிருக்கிறார்.