இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை எப்பொழுதும் தலைசிறந்த பேட்ஸ்மேன்களை உருவாக்குவதில் முன்னணியில் இருந்து வந்திருக்கிறது. இந்தியாவில் இருந்து உருவான பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் முன்னணியில் இருந்து உலகக் கிரிக்கெட்டை வழிநடத்தி இருக்கிறார்கள்.
இந்த வகையில் எடுத்துக் கொண்டால் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் சுனில் கவாஸ்கர் இருந்தார். பின்பு தொண்ணூறுகளில் உலகக் கிரிக்கெட்டுக்கு தூதுவராக சச்சின் டெண்டுல்கர் வந்தார். இதற்கு அடுத்து தற்பொழுது ரன் மெஷின் விராட் கோலி இருந்து வருகிறார்.
இப்படி இந்திய கிரிக்கெட் பேட்ஸ்மேன்களை சார்ந்து இயங்கி வருகிறது. எல்லா காலக்கட்டத்திலும் இந்திய கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களே முதல் நிலை சூப்பர் ஸ்டார்கள் ஆக இருந்து வந்திருக்கிறார்கள்.
இங்கிலாந்து அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வரும் மொயின் அலியிடம் எல்லா காலத்திலும் தலைசிறந்த இந்திய வீரர்கள் 5 பேர் யார் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்து பேசி உள்ள மொயின் அலி கூறும் பொழுது “எனக்கு முதல் இடத்தில் வரக்கூடியவர் மகேந்திர சிங் தோனி. அவர் மிகச்சிறந்த வீரர். ஆனால் அவருடைய சிறப்பு என்னவென்று மக்கள் மறந்து விடுகிறார்கள். ஒரு கேப்டனாக அவர் வென்ற எல்லாமே அற்புதமானது.
இரண்டாவது இடத்தில் எனக்கு இருப்பவர் விராட் கோலி. அவர் சிறந்தவர் மற்றும் சிறந்தவர்களில் ஒருவர்.
மூன்றாவது இடத்தில் இருப்பவர் சச்சின். அவர்தான் சரியான பேட்டிங் கலையை துவங்கியவர். சுனில் கவாஸ்கரும் இருந்தார் ஆனால் அவர் என் காலத்திற்கு முன்பாக இருந்தவர். அதனால் நான் சச்சினை தேர்வு செய்திருக்கிறேன். அவர் வேறு லெவலானவர்.
எனக்கு பிடித்த பேட்டர் வீரேந்திர சேவாக். ஏனென்றால் அவர் வித்தியாசமானவர். அவர் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் பேட்டிங் செய்த விதம் அபாரமானது. அவர் பேட்மேன்களை நிமிர விடாமல் அடித்து ரன்கள் எடுத்தவர்.
நான் ஒரு பேட்டராக பார்த்துக் கொண்டிருந்த பேட்ஸ்மேன் யுவராஜ் சிங். அவரை நான் ஓரளவுக்கு ஜெராக்ஸ் எடுக்க முயற்சி செய்திருக்கிறேன். நான் அவரைப் போல விளையாடுவதாக மக்கள் சில நேரங்களில் கூறி இருக்கிறார்கள். அவருடைய பேட் ஸ்விங் ஆச்சரியமான ஒன்று. அவர் பேட்டிங் ஃபார்மில் இருக்கும் பொழுது சிறந்த வீரராக இருந்தார்” என்று கூறியிருக்கிறார்!