2வது ஒருநாள் போட்டியில் மோசமான உலக சாதனையை படைத்துள்ள இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்

0
206
Rohit Sharma Shikhar Dhawan and Virat Kohli

இந்தியா இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என சிறப்பாக விளையாடி கைப்பற்றியது. டி20 தொடரில் இந்திய பேட்ஸ்மேன்களின் அணுகுமுறை மிகத் தைரியமாய் இருந்தது. சூர்யகுமார் யாதவ் கடைசி டி20 போட்டியில் அதிரடியாய் விளையாடி 55 பந்துகளில் 117 ரன்களோடு ஒரு சதம் அடித்துப் பிரமாதப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இலண்டன் நகர கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் மூன்று போட்டிகள் ஒருநாள் தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. இங்கிலாந்து அணியை 25.2 ஓவர்களில் 110 ரன்களுக்கு சுருட்டி, பத்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. பும்ரா 19 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரோகித் சர்மா 58 பந்துகளில் 76 ரன்கள் அடித்தார்.

இந்த நிலையில் இன்று ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி இலண்டன் நகர லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். முதல் ஆட்டத்தில் விளையாடாத விராட்கோலி இந்த ஆட்டத்தில் விளையாடுகிறார்.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் முன்னணி வீரர்கள் யாருமே நிலைத்து நின்று விளையாடவில்லை. மொயீன் அலியும், டேவிட் வில்லி இருவர் மட்டுமே சற்றுத் தாக்குப் பிடித்து ஆடி அணியை ஐம்பது ஓவர்கள் முடிவில் 246 ரன்களை எட்ட வைத்தனர். சாஹல் 47 ரன்கள் தந்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 247 என்ற இலக்கை நோக்கிக் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடியை இங்கிலாந்து துவக்க வேகப்பந்து வீச்சாளர்களான டாப் சிப்லி, டேவிட் வில்லி பயங்கரமாய் தடுமாற வைத்தனர்.

டாப் சிப்லி-டேவிட் வில்லி இடக்கை வேகப்பந்து வீச்சு ஜோடியின் பந்துவீச்சில் இந்திய ஓபனர்களின் பேட்டிலிருந்து ரன்களே வரவில்லை. லெக்-பை முறையில்தான் முதல் ரன்கனே மூன்றாவது ஓவரில் வந்தது. இதையடுத்து டாப் சிப்லி வீசிய ஐந்தாவது ஓவரின் மூன்றாவத பந்தில்தான் ஷிகர் தவான் பேட் மூலம் முதல் ரன்னை எடுத்தார். 27 வது பந்தில்தான் முதல் ரன் பேட் மூலம் இந்திய அணிக்கு வந்தது.

இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்கா நியூசிலாந்து சிட்னி மைதானத்தில் மோதிய போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 26வது பந்தில் பேட் மூலம் முதல் ரன் எடுத்திருந்ததே, இந்தவகையில் மோசமான சாதனையாக இருந்தது. தற்பொழுது இதை உடைத்து புதிய மோசமான சாதனையைப் படைத்திருக்கிறது ரோகித் சர்மா – ஷிகர் தவான் கூட்டணி!