ஐசிசி தொடர்களை தவிர இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்களில் இந்திய அணியின் செயல்பாடு எந்த ஒரு கிரிக்கெட் நாட்டையும் விட மிக அபாரமான முறையில் இருந்து வருகிறது.
வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து பணிச்சுமையை நிர்வகிக்கும் பொருட்டு எந்த மாதிரியான வீரர்களை கொண்டு வந்து அணியை உருவாக்கி, இரு நாடுகளுக்கு இடையே ஆன தொடர்களை சந்தித்தாலும், இந்திய அணி சிறப்பான முறையில் செயல்பட்டு தொடர்களை வெல்கிறது.
கடைசி டி20 உலகக் கோப்பைக்கு பின்பாக இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் ஆகிய மூவரும் இந்திய டி20 அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.
இந்த நேரத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் இந்திய அணி ஒரு வருடத்திற்கும் மேலாக விளையாடி வந்தது. ஆனாலும் கூட இந்திய அணியின் செயல்பாடு மிகச் சிறப்பாகவே இருந்தது. அந்த அளவிற்கு இளம் வீரர்கள் சர்வதேச மட்டத்தில் வந்ததும் சாதிக்கும் அளவுக்கு சிறப்பான நிலையில் காணப்படுகிறார்கள்.
இப்படியான சூழலில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மீண்டும் இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை திரும்ப அழைத்து விளையாட வைத்திருக்கிறது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்கள் கொஞ்சம் மெதுவாகவும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாகவும் இருக்கும் என்பதால், அதிரடி மட்டுமில்லாமல் அங்கு அனுபவத்திற்கும் வேலை இருக்கிறது. எனவே இதன் அடிப்படையில் இவர்கள் தேவைப்படுகிறார்கள்.
இந்த நிலையில் முதல் போட்டியில் விளையாடாமல் இரண்டாவது போட்டியில் விளையாடிய விராட் கோலி 16 பந்துகளில் அதிரடியாக 29 ரன்கள் எடுத்து, தான் எப்பொழுதும் போல மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் கிங் என்பதை காட்டிவிட்டார்.
ஆனால் ரோகித் சர்மா இரண்டு போட்டிகளிலும் இன்னும் ரன் கணக்கையே துவங்கவில்லை. முதல் போட்டியில் இரண்டு பந்துகளில் ரன் இல்லாமல் வெளியேறிய அவர், இந்த முறை முதல் பந்திலேயே கோல்டன் டக் அடித்து வெளியேறினார்.
இதுகுறித்து நேற்று கிரிக்கெட் வர்ணனையில் பேசிய தினேஷ் கார்த்திக் “இந்தத் தொடரில் இந்திய அணியின் ஒரே தோல்வியாக கேப்டன் ரோஹித் சர்மா மட்டுமே இருக்கிறார். அவருக்கு இரண்டு போட்டிகளில் இரண்டு தோல்விகள் வந்திருக்கின்றன. ஆனாலும் அவர் இது குறித்து கவலைப்பட மாட்டார். அவர் நீண்ட காலம் கழித்து டி20 கிரிக்கெட் இந்திய அணிக்கு கேப்டனாகவும் திரும்பி இருக்கிறார்.
முதல் ஆட்டத்தில் அவர் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். இரண்டாவது போட்டியில் பந்தை அடிப்பதற்கு சென்று ஸ்டெம்பை இழந்தார். அவருக்கு தனிப்பட்ட முறையில் இரண்டு ஆட்டங்கள் தோல்வியாக அமைந்தாலும் கூட, இந்திய அணி சிறப்பான முறையில் செயல்பட்டு வென்று இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.