இந்திய கிரிக்கெட்டின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருவரும் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி வருகிறார்கள். இதில் ருதுராஜ் மற்றும் அபிஷேக் சர்மாவை இந்திய அணிகளில் தேர்வு செய்யாதது ஏன் என்பது குறித்து அஜித் அகர்கர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
இந்திய அணி இந்த மாத இறுதியில் இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஓய்வு பெற்றதால் இந்த தொடருக்கான அணி அறிவிப்பு மிகவும் முக்கியமாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் சிறப்பாக டி20 கிரிக்கெட்டில் செயல்பட்டு வந்த ருதுராஜுக்கு இடம் கொடுக்கப்படவில்லை. அதே சமயத்தில் ஜிம்பாபே அணிக்கு எதிராக டி20 தொடரில் சதம் அடித்த அபிஷேக் சர்மாவையும் தேர்வு செய்யவில்லை.
இதையெல்லாம் தாண்டி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ருதுராஜை விட குறைந்த செயல்பாட்டை கொண்டிருக்கும் சுப்மன் கில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவரை இந்திய டி20 கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஆகவும் அறிவித்து அதிர்ச்சியை கொடுத்தார்கள். எனவே கில் உடைய இடம் டி20 இந்திய அணியில் உறுதியானதாக மாறியது.
இதன் காரணமாக ருதுராஜ் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவருக்கும் இந்திய டி20 அணியின் கதவுகள் சாத்தப்பட்டது. இதன் காரணமாக சமூக வலைதளங்களில் நிறைய விமர்சனங்கள் சென்று கொண்டிருக்கிறது. தற்பொழுது இருவரையும் ஏன் இந்திய டி20 அணியில் தேர்வு செய்யவில்லை என தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்திருக்கிறார்.
இதையும் படிங்க : பிராட்மேனின் 99.94 ஆவரேஜ்தான் மிச்சம்.. ஹாரி புரூக் ஆச்சரியப்படுத்தும் சாதனை.. டெஸ்ட் பேட்டிங்கில் உச்சம்
ருதுராஜ் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் தேர்வு செய்யப்படாத குறித்து அஜித் அகர்கர் கூறும் பொழுது ” சிறப்பாக செயல்படும் அணிக்கு தேர்வு செய்யப்படாத பொழுது வீரர்கள் அதை மிக கடினமாக உணர்வார்கள். நீங்கள் ரிங்கு சிங்குவை எடுத்துக் கொள்ளுங்கள் அவர் சிறப்பாக செயல்பட்டு இருந்த பொழுதும் கூட எங்களால் அவரை டி20 உலகக்கோப்பை இந்திய அணிக்கு தேர்வு செய்ய முடியவில்லை. நாங்கள் 15 பேர் கொண்ட அணியைத்தான் தேர்வு செய்ய முடியும். அதனால் சில நல்ல வீரர்கள் விடுபடுகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.






