இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி காயத்தில் இருந்து மீண்டு ஒரு வருடம் கழித்து இந்திய அணியில் இடம் பிடித்தது குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் போது அணிக்காக காலில் ஏற்பட்டிருந்த காயத்துடன் விளையாடினார். இதன் காரணமாக காயம் பெரிதாகி அறுவை சிகிச்சை செய்து, திரும்ப அணிக்கு வருவதற்கு ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முகமது ஷமி பும்ராவுடன் இணைந்து பந்து வீசி இருந்தால் தொடரின் முடிவு வேறு விதமாக அமைந்திருக்கும் என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இல்லாததால் பெரிய இழப்பு ஏற்பட்டது.
மீண்டும் வந்தது குறித்து பேசி இருக்கும் முகமது ஷமி “நீங்கள் ரன்கள் எடுக்கும் பொழுதும் விக்கெட் எடுக்கும் பொழுதும் உங்களுடன் எல்லோரும் இருப்பார்கள். ஆனால் கடினமான காலகட்டத்தில் உங்களுடன் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிவதுதான் உண்மையான சோதனை. ஒரு வருடம் முழுவதும் காத்திருந்தேன், மிகக் கடுமையாக உழைத்தேன். அப்போதும் ஓடும் பொழுது பெரிய பயம் இருந்தது”
“ஒரு வீரர் நல்ல நிலையில் இருக்கும் போது காயம் அடைவதும், காயத்திற்காக என்சிஏ சென்று மீண்டும் திரும்பி வருவதும் மிகவும் கடினமான காரியமாகும். அதே சமயத்தில் ஒரு விளையாட்டு வீரராக நீங்கள் காயங்களை சந்திக்கும் பொழுது, உங்களுடைய தன்னம்பிக்கை வளர்வதற்கும் மிகப்பெரிய வாய்ப்புகள் இருப்பதாக நான் உணர்கிறேன்”
இதையும் படிங்க : கேகேஆர் சம்பந்தமா ஸ்ரேயாஸ் ஐயர் சொல்வது பொய்.. என்கிட்ட ஆதாரம் இருக்கு – ஆகாஷ் சோப்ரா பேட்டி
“ஏனென்றால் நீங்கள் மனரீதியாக வலிமை அடைவதற்கு வாய்ப்புகள் அதிகம். நீங்கள் காயத்தில் இருந்து திரும்பும் பொழுது ஒரு குறிப்பிட்ட வேலையை திரும்பத் திரும்ப செய்து கொண்டே இருக்க வேண்டியது இருக்கும். நான் தற்பொழுது இந்த கட்டத்தை தாண்டி விட்டேன். எதையும் நம்பிக்கை உடன் முயற்சியை கைவிடாமல் கடுமையாக உழைத்தால், அதை அடைய முடியும் என்பதை கற்றுக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.