இந்திய டி20 அணி எதிர்காலத்தில் வெற்றிகளை பெற வேண்டும் என்றால் என்ன மாதிரி அணுகுமுறையில் விளையாடினால் வெற்றி பெற முடியும்? என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மிகவும் வெளிப்படையான முறையில் பேசி இருக்கிறார்.
தற்போது இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4க்கு 1 என கைப்பற்றி அசத்தியிருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணியின் பேட்டிங் அணுகுமுறை மிகவும் அச்சமற்றதாக அமைந்திருந்தது. விக்கெட் சரிவு பற்றிய கவலை இல்லாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து தாக்குதல் பாணியில் விளையாடுகின்றார்கள்.
கவுதம் கம்பீரின் புதிய திட்டம்
தற்போது இந்திய டி20 அணிக்கு வெளியில் நட்சத்திர இளம் வீரர்கள் சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்திய டி20 அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் மற்றும் இடது கை பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா இருவரும் களமிறங்கி வருகிறார்கள்.
இவர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கப்பட்ட பிறகு அபிஷேக் ஷர்மா இரண்டு சதங்கள் மற்றும் சஞ்சு சாம்சன் மூன்று சதங்கள் டி20 கிரிக்கெட்டில் அடித்திருக்கிறார்கள். மேலும் இந்திய அணி தொடர்ச்சியாக டி20 தொடர்களை வென்று வருகிறது. எனவே தற்போது வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கும் இவர்கள் இருவருமே தொடர்ந்து இந்திய டி20 அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கம்பீர் இவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவே விரும்புகிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது.
வெற்றி பெறுவதற்கான வழிமுறை
இந்திய டி20 அணியின் அணுகுமுறை குறித்து பேசி இருக்கும் கம்பேர் கூறும் பொழுது “எங்கள் இந்திய அணிக்கு தோல்வி பயம் என்பது கிடையாது. நாங்கள் ரிஸ்க் அதிக ரிவார்டு என்கின்ற முறையில் விளையாடிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் இப்படியாக அச்சமற்று விளையாடும் முறையில்தான் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். எங்களுடைய வீரர்களும் எங்களுடைய புதிய தத்துவத்திற்கு ஏற்ற வகையில் மாறி வந்து விட்டார்கள்”
இதையும் படிங்க : கெயில் டிவிலியர்ஸ் மாதிரி அபிஷேக்.. இந்த பையன் அடிச்சது சாதாரண ஆளுங்கள இல்ல – மெக்கலம் பாராட்டு
“நீங்கள் இந்த அணுகு முறையில் விளையாடும் பொழுது தொடர்ந்து 250 ரன்கள் அடித்துக் கொண்டே இருக்க முடியாது. நீங்கள் எப்போதாவது 130 ரன்னுக்கும் ஆல் அவுட் ஆகவே செய்வீர்கள். இருந்தாலும் நாங்கள் அதற்கும் தயாராகவே இருக்கிறோம். மேலும் நீங்கள் அதிக ரிஸ்க் எடுத்து விளையாடாவிட்டால் இந்த வடிவ கிரிக்கெட்டில் தொடர்ந்து வெற்றி பெறுவது கடினம்” என்று கூறி இருக்கிறார்.