இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கிரிக்கெட் உலகில் ஒரு புதிய வரலாற்றை மாற்றி எழுதி மிகப் பெரிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 474 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணி நிதிஷ்குமார் ரெட்டியின் அபார சதத்தின் மூலமாக 369 ரன்கள் குவித்தது. இதற்குப் பிறகு ஆஸ்திரேலியா அணி தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வரும் நிலையில் பும்ராவின் அபாரமான பந்துவீச்சு மூலமாக 111 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றமான முறையில் விளையாடி வருகிறது.
இதில் கடந்த இன்னிங்ஸில் பும்ராவின் பந்துவீச்சில் அடித்து விளையாடிய 19 வயது இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் வெறும் 8 ரன்னில் அவரது பந்துவீச்சில் ஸ்டம்ப்புகள் சிதற ஆட்டம் இழந்து வெளியேறினார். அதற்குப் பிறகு கவாஜா 21 ரன்னில் சிராஜ் பந்தில் வெளியேற, ஸ்மித் 13 ரன்னில் சிராஜ் பந்துவீச்சில் வெளியேறினார். அதற்குப் பிறகு இந்தியாவின் பிரச்சனையான டிராவிஸ் ஹெட் உள்ளே வர ரோஹித் சர்மா திரும்ப பும்ராவின் கைகளில் பங்கை கொடுத்தார்.
ஹெட் தனது இரண்டாவது பந்தில் பும்ராவின் பௌலிங்கில் நிதீஷ் குமார் ரெட்டி இடம் ஆட்டமிழந்து வெளியேற, கிரிக்கெட் உலகில் பும்ரா ஒரு அபாரமான சாதனையை படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 20க்கும் குறைவான பந்து வீச்சு சராசரியில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேக பந்துவீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்தார். வெறும் 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 200 விக்கெட்டுகள் வீழ்த்தி பும்ரா ஒரு சிறப்பான சாதனையை படைத்திருக்கிறார்.
இதையும் படிங்க:சதம் அடிச்சதும்.. பேட்ட தரையில நிறுத்தி ஹெல்மெட் வெக்க காரணம் இதுதான் – நிதீஷ்குமார் ரெட்டி பேட்டி
2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய பும்ரா அதற்குப் பின்னர் ஆறு ஆண்டுகளில் 44வது டெஸ்ட் போட்டியில் டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தியது இவருக்கு 200 வது விக்கெட்டாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் 19.52 சராசரியில் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். தற்போது இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிவரும் ஆஸ்திரேலியா அணி சற்று முன்பு வரை 6 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.