தற்போது இந்திய கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற சச்சின் டெண்டுல்கர் மற்றும் தோனிக்கு அளிக்கப்பட்ட மரியாதை ஒன்று விராட் கோலிக்கு அளிக்கப்படாதது ரசிகர்களை கோபம் அடைய வைத்திருக்கிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். தற்போது அவர் இந்திய கிரிக்கெட்டில் ஒருநாள் வடிவத்தில் மட்டுமே வீரராக தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சச்சின் தோனிக்கு தரப்பட்ட மரியாதை
இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக சச்சின் டெண்டுல்கர் பார்க்கப்படுகிறார். இதே போல இந்திய கிரிக்கெட்டில் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக தோனி இருக்கிறார். இவர்கள் இருவரும் ஓய்வு பெற்ற பிறகு இந்திய கிரிக்கெட் வாரியம் மிக முக்கியமான மரியாதை ஒன்றை செலுத்தியது. அதற்கு தகுதியானவர்களாக இருவருமே இருக்கிறார்கள்.
அதாவது, இவர்கள் இருவரும் ஓய்வு பெற்ற பிறகு இவர்களுடைய ஜெர்சி எண் 10 மற்றும் 7 நிறுத்தி வைக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட்டில் இந்த எண் வேறு எந்த வீரருக்கும் கொடுக்கப்படாது என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இது ஒரு விளையாட்டு வீரருக்கு கிடைக்கும் மிகப் பெரிய அங்கீகாரம் மற்றும் மரியாதை என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலிக்கு மட்டும் கிடையாதா?
இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தோனி இருவருக்கும் கொஞ்சமும் குறைவில்லாத மிகப்பெரிய இந்திய நட்சத்திர வீரராக விராட் கோலி இருக்கிறார். ஆனால் இவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்ததும், இவருடைய ஜெர்சி எண் இந்திய ஏ அணிகள் இடம் பெற்று இருக்கும் இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகேஷ் குமாருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க : ஆர்சிபி மென்டர் தினேஷ் கார்த்திக் பிறந்த நாள்.. சிஎஸ்கே செய்த காரியம்.. தல டீம் வேற மாதிரிதான்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
இந்த நிலையில் இதற்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும்பான்மையாக சமூக வலைதளத்தில் தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள். மற்ற இரண்டு லெஜன்ட் வீரர்களுக்கு கொடுத்த மரியாதையை விராட் கோலிக்கு கொடுக்காதது மிகப்பெரிய தவறு என்றும், அவரையும் முகேஷ் குமாரையும் ஒரே இடத்தில் வைப்பது நல்ல செயல் இல்லை எனவும் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.






