இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் சுப்மன் கில் சதம் அடித்து அசத்தல் சாதனை படைத்திருக்கிறார். மேலும் ஆசியா தாண்டி தனது முதல் டெஸ்ட் சதத்தையும் பதிவு செய்திருக்கிறார்.
இன்று இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லீட்ஸ் ஹெட்டிங்லி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் தங்கள் அணி பந்து வீசும் என அறிவித்தார்.
ஜெய்ஸ்வால் சதம்
இந்த போட்டியில் இந்திய அணிக்கு முதல் விக்கட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் கிடைத்தது. கேஎல்.ராகுல் 42 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 101 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதைத் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக நான்காவது இடத்தில் வந்த கேப்டன் கில் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தவுடன், ஜெய்ஸ்வால் உடன் இணைந்து 129 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்சன் ரன் ஏதும் இல்லாமல் வெளியேறினார்.
விராட் கோலியை தாண்டிய கில்
ஜெய்ஸ்வால் ஆட்டம் இழந்த பிறகு ரிஷப் பண்ட் உடன் சேர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை மீண்டும் தொடர்ந்த கேப்டன் கில் அபாரமாக ஆடி 159 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் சதம் அடித்து அசத்தினார். மேலும் கேப்டனாகவும், இங்கிலாந்து மண்ணிலும், நான்காவது இடத்திலும் முதல் போட்டியிலேயே சதம் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கேப்டனாக விஜய் ஹசாரே, கவாஸ்கர் விராட் கோலி அவருக்கு அடுத்து முதல் போட்டியில் கில் சதம் அடித்திருக்கிறார்.
இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் அதிரடி சதம்.. மிரள வைக்கும் ஹாட்ரிக் சாதனை.. யாரும் செய்ய முடியாத காரியம்.. இங்கிலாந்து அணி திணறல்
விராட் கோலி நான்காவது இடத்தில் முதல்முறையாக பேட்டிங் செய்ய டெஸ்ட் கிரிக்கெட்டில் வந்த பொழுது அரைசதம் அடித்தார். கேப்டனாக முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார். ஆனால் கில்லுக்கு கேப்டனாகவும், நான்காவது இடத்திலும் ஒரே நேரத்தில் முதல் போட்டி அமைந்ததால், ஒரே போட்டியில் சதம் அடித்து விராட் கோலியை தாண்டி சாதித்திருக்கிறார். தற்பொழுது இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்திருக்கிறது.






