நேற்று மும்பை வான்கடே மைதானத்தின் 50 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மிக முக்கியமான விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் துவங்க இருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்திய அணி தங்களது போட்டிகளை துபாயில் வைத்து விளையாடுகிறது. பிப்ரவரி 20, பிப்ரவரி 23, மார்ச் 2 ஆகிய தேதிகளில் பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கிறது.
ரோகித் சர்மாவுக்கு மீண்டும் கிடைத்த வாய்ப்பு
இந்திய கேப்டன் ரோஹித் சர்மா உள்நாட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் மிக மோசமாக டெஸ்ட் தொடரை இழந்தது அவரது கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை நீட்டித்துக் கொள்வதற்கு சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இந்தத் தொடரை அவரது தலைமையின் கீழ் இந்திய அணி வென்றால், இன்னும் இரண்டு வருடங்கள் ரோகித் சர்மா கேப்டனாக தொடர்வதற்கான வாய்ப்புகள் ஓரளவுக்கு இருக்கிறது. தனிப்பட்ட முறையில் அவர் இந்த தொடரை மிகவும் முக்கியமானதாக கருதுகிறார்.
வான்கடேவுக்கு டிராபி வரும்
எனவே ரோகித் சர்மா சாம்பியன்ஸ் டிராபிக்கு சிறந்த முறையில் தயாராக உறுதி செய்து கொண்டு வருகிறார். மேலும் அணி தேர்விலும் அவருடைய ஈடுபாடு நிறைய காணப்பட்டது. சாம்பியன்ஸ் டிராபிக்கான அணி அறிவிப்பின் போதும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் உடன் கேப்டன் ரோகித் சர்மாவும் கலந்து கொண்டு பல கேள்விகளுக்கு பத்திரிகையாளர்களுக்கு பதில் அளித்து இருந்தார்.
இதையும் படிங்க : ஷமி மீண்டும் காயமா?.. பயிற்சியில் நடந்த முதல் திருப்பம் – கொல்கத்தாவில் வெளியான தகவல்
இந்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மா நேற்று பேசும்போது “நாங்கள் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதற்கு எல்லா வகையிலும் முயற்சி செய்வோம். ஐசிசி தொடரில் இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு கனவு போன்று ஆனது. நாங்கள் மீண்டும் ஒரு கனவில் இறங்கப் போகிறோம். நாங்கள் விளையாடுவதற்கு துபாய் செல்லும் பொழுது 140 கோடி இந்திய மக்களின் ஆதரவு எங்கள் பின்னால் இருக்கும் என்று நினைக்கிறேன். வான்கடே மைதானத்திற்கு மீண்டும் கோப்பையை கொண்டு வர எல்லா முயற்சியையும் செய்வோம்” என்று கூறியிருக்கிறார்.






