ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் இடம்பெற்றிருக்கும் பும்ரா கட்டாயம் விளையாடுவாரா? சிராஜை நீக்கி ஜெய்ஸ்வாலை சேர்த்தது எதற்காக? என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்திருக்கிறார்.
இன்று இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் 15 பேர் கொண்ட இந்திய அணியை சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு அறிவித்தார். இதில் சில ஆச்சரிய படத்தக்க முடிவுகளும் அடங்கி இருக்கிறது. தற்போது வீரர்களின் பார்ம் மட்டும் இல்லாமல் விளையாடக்கூடிய துபாய் கண்டிஷனுக்கு தகுந்தவாறு டீம் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
தற்போது ஜெய்ஸ்வால் அணியில் இடம் பெற வேண்டும் அவரே துவக்க ஆட்டக்காரராகவும் களமிறங்க வேண்டும் என நிறைய கோரிக்கைகள் வெளியிலிருந்து வந்த வண்ணம் இருந்தது. இப்படியான நிலையில் ஜெய்ஸ்வாலுக்கு அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் கில்லுக்கு துணை கேப்டன் பதவியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அவர் தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவார் என்று மறைமுகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியில் நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள். மேலும் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் இந்திய அணியில் இடம் பெற்று வந்த முகமது சிராஜ் அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார். அவருடைய இடத்திற்கு அர்ஸ்தீப் சிங் சேர்க்கப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அணி தேர்வு குறித்து பேசி இருக்கும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா “ஜெய்ஸ்வால் கடந்த இரண்டு வருடங்களில் செயல்பட்டு இருக்கும் சிறப்பான செயல்பாட்டின் அடிப்படையில் அவரை நாங்கள் தேர்வு செய்திருக்கிறோம். இன்னும் அவர் ஒரு ஒருநாள் போட்டி கூட விளையாடவில்லை. ஆனால் அவரால் இந்த வடிவத்திலும் சிறப்பாக விளையாட முடியும் என்று எங்களுக்கு தெரியும். அதனால்தான் அவரை தேர்வு செய்தோம்”
இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணி அறிவிப்பு.. பும்ரா கம்பேக்.. 4 ஸ்பின்னர்கள்.. சிராஜ் நீக்கம்
“மேலும் தற்போது பும்ரா எப்படி இருக்கிறார் என்பது குறித்து எங்களுக்கு தெளிவாக தெரியவில்லை. எனவே அவரது ரோலை செய்யக் கூடிய ஒருவர் வேண்டுமென்று விரும்பினோம். இதற்காகவே நாங்கள் அர்ஸ்தீப் சிங்கை தேர்வு செய்து இருக்கிறோம். முகமது சிராஜ் எதிர்பார்த்த அளவுக்கு திறம்பட செயல்பட முடியவில்லை. பந்து பழையதாகும் பொழுது அவரது செயல்பாடு தாக்கம் தருவதாக இல்லை. எனவே அவர் சேர்க்கப்படவில்லை” என்று கூறி இருக்கிறார்.