இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வரலாற்று தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இந்த தொடர் குறித்தும் தோல்வி குறித்தும் இந்திய கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டி அளித்திருக்கிறார்.
தற்போது அசாம் கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்ற முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வி அடைந்தது. மேலும் முதல் டெஸ்ட் போட்டியையும் இந்திய அணி தோற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக உலக கிரிக்கெட்டில் ஒரு உலகக் கோப்பை தொடரை ஜெயிப்பதை விட இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரை வெல்வது தான் பெரிய கவுரவம் என பலரும் கூறுவார்கள். அந்த அளவிற்கு இந்திய அணி இந்தியாவில் டெஸ்ட் தொடரில் வீழ்த்த முடியாத அணியாக இருந்து வந்தது.
இந்த நிலையில் கம்பீர் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்த பிறகு இந்திய டெஸ்ட் அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மொத்தமாக தோற்றது. இந்த நிலையில் மீண்டும் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மொத்தமாக தோற்று இருக்கிறது.
இது குறித்து ரிஷப் பண்ட் பேசும் பொழுது “இது கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கிறது. நாங்கள் ஒரு அணியாக இன்னும் மேம்பட வேண்டும். மேலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எல்லா பெருமையையும் கொடுக்க வேண்டும். இந்த தொடரில் இருந்து பாடம் எடுத்துக் கொண்டு நாங்கள் முன்னேற வேண்டும். அவர்கள் எங்கள் மீது முழுமையாக ஆதிக்கம் செலுத்தினார்கள். நாம் நம்முடைய மனநிலையில் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம்”
இதையும் படிங்க : 25 வருடம்.. 408 ரன்.. கம்பீர் பயிற்சியில் சரிந்த மணிமகுடங்கள்.. வரலாற்று தோல்வி.. தென் ஆப்பிரிக்கா சாதனை
“இங்கிருந்து பாடத்தை எடுத்துக்கொண்டு அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டும். நிச்சயமாக அவர்கள் எங்களை விட சிறப்பாக விளையாடினார்கள். கிரிக்கெட்டில் எப்பொழுதும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாங்கள் இந்த தொடரில் அதை செய்ய தவறி விட்டோம். ஒரே நல்லது என்னவென்றால் நம்முடைய திட்டத்தில் கவனம் செலுத்துவது. இந்த தொடரில் இருந்து இது ஒன்றை மட்டும் நாங்கள் எடுத்துச் செல்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.