நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை துவக்க ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வெகு எளிதாக நியூசிலாந்து அணி வீழ்த்தி ஆச்சரியம் கொடுத்திருக்கிறது!
முதலில் பேட்டிங் செய்து இங்கிலாந்து அணி நிர்ணயித்த 283 ரன்கள் இலக்கை ஒரு விக்கெட் மட்டுமே இழந்து நியூசிலாந்து அணி 36.2 ஓவர்களில் எட்டி அனாயசமாக வென்றது.
இங்கிலாந்து அணி பேட்டிங்கில் நிமிர வேண்டிய கட்டத்தில் எல்லாம் மிகச் சரியாக விக்கெட்டை கொடுத்து நெருக்கடியில் மாட்டிக்கொண்டது. நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் விக்கெட்டை எடுத்தார்கள் என்பதைவிட இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் கொடுத்தார்கள் என்பதே சரியாக இருக்கும்.
அதேபோல் அவர்களுடைய பந்துவீச்சில் எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லை. நியூசிலாந்து அணியின் கான்வே மற்றும் ரவீந்தரா இருவரும் மிக எளிதாக இங்கிலாந்து பந்துவீச்சை விளையாடி நியூசிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.
இங்கிலாந்து அணிக்கு முதல் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை பெற்று தந்த கேப்டன் இயான் மோர்கன் கூறும்பொழுது ” போட்டி முழுதும் போட்டிக்கு வெளியில் அவர்கள் இருந்த தருணங்கள் நிறைய இருக்கிறது. இங்கிலாந்து போட்டியிட்டது போல தெரியும் ஆனால் அப்படி கிடையாது. அவர்கள் போட்டியே இடவில்லை.
நீங்கள் இந்த உலகக்கோப்பையில் ஃபேவரைட் ஆக இருக்கும் பொழுது உங்கள் மீது நிறைய எதிர்பார்ப்பு இருக்கும். உங்கள் தோள் மீது நிறைய அழுத்தம் இருக்கும். இருந்தாலும் நீங்கள் போட்டியின் எந்த கட்டத்தில் இருந்தாலும் சிறப்பாக செயல்பட வேண்டும்.
கடந்த டி20 உலகக் கோப்பையின் அரைஇறுதியில் இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி எப்படி பேட்டிங் செய்தது என்பதை எனக்கு நியூசிலாந்து அணி இன்று பேட்டிங் செய்த பொழுது நினைவூட்டியது. அன்று இந்தியாவுக்கு இங்கிலாந்து கட்டளையிட்டது. இன்று இங்கிலாந்துக்கு நியூசிலாந்து கட்டளையிட்டு இருக்கிறது.
நியூசிலாந்து மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தது. அதே சமயத்தில் அவர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு விக்கெட் வீழ்த்தினார்கள் என்று சொல்ல முடியாது. இவர்கள் கொத்து கொத்தாக விக்கெட் கொடுத்தார்கள்.
டேவிட் மாலாவுடன் ஜானி பேர்ஸ்டோ சேர்ந்து விளையாடுவது கொஞ்சம் வித்தியாசமானது. இந்த இடத்தில் ஜானி பொறுப்பெடுத்து சீக்கிரத்தில் ரண்களுக்கு செல்ல வேண்டியது இருக்கிறது. இதே இந்த இடத்தில் ஜேசன் ராய் இருந்திருந்தால் அவர் அந்த வேலையை செய்திருப்பார்!” என்று கூறியிருக்கிறார்!