இந்தியா வரலாற்று சாதனையை தவறவிட்டது.. ஆஸி கடைசி ODI-ல் வெற்றி.. மேக்ஸ்வெல் பந்துவீச்சில் கலக்கல்!

0
3621
Rohit

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.

தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்து இந்தியா வந்து மொத்தம் தொடர்ந்து ஐந்து போட்டிகளை தோற்று இருந்த ஆஸ்திரேலியா அணிக்கு, ஆறாவது முறையாக உலகக் கோப்பைக்கு முன்பாக நம்பிக்கை அளிக்கும் விதமாக இந்த வெற்றி கிடைத்து இருக்கிறது. மேலும் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா ஆல் அவுட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு வார்னர் 56 (34), மார்ஸ் 96 (84), ஸ்மித் 74 (61), லபுசேன் 72 (58) என நால்வரும் அதிரடியாக அரை சதங்கள் அடித்தார்கள். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது. பும்ரா பத்து ஓவர்களுக்கு 81 ரன்கள் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

இந்த நிலையில் மிகப்பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரோகித் சர்மா இருவரும் துவக்க வீரர்களாக வந்தார்கள். வாஷிங்டன் சுந்தர் 71 ரன்கள் அணி இருந்த பொழுது 30 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி 70 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். ரோகித் சர்மா 57 பந்துகளில் ஐந்து பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 81 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து விராட் கோலி 61 பந்தில் 56 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, ஆட்டத்தில் பெரிய திருப்புமுனை உருவானது. இந்த மூன்று பேருடைய விக்கெட்டையும் பகுதிநேர பந்துவீச்சாளர் மேக்ஸ்வெல் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து கேஎல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் இணைந்து ஒரு பார்ட்னர்ஷிப் உருவாக்கினார்கள். கேஎல்.ராகுலை 26 ரன்களில் ஸ்டார்க் வெளியேற்றினார். மீண்டும் வந்த மேக்ஸ்வெல் ஸ்ரேயாஸ் ஐயரை 48 ரன்களில் வெளியேற்ற, ஆட்டம் ஒட்டுமொத்தமாக இந்தியா கையை விட்டு ஆஸ்திரேலியா கைக்கு சென்றது.

இறுதிக்கட்டத்தில் ரவீந்திர ஜடேஜா மட்டும் தனியாக விளையாடி 36 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்திய அணி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் மேக்ஸ்வெல் 40 ரன்கள் 10 ஓவர்களுக்கு தந்து நான்கு விக்கெட் வீழ்த்தினார். மேலும் இந்த தொடரை இரண்டுக்கு ஒன்று என இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது.

இந்தப் போட்டியை இந்திய அணி வென்று தொடரை முழுமையாக கைப்பற்றி இருந்தால், முதன்முறையாக இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரை முழுமையாக கைப்பற்றிய வரலாற்று சாதனையை படைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதை இந்திய அணி தவறவிட்டு இருக்கிறது!