இரண்டு அணிகளாக பிரிந்து ஒரே நேரத்தில் 2 போட்டிகள் ஆட காத்திருக்கும் இந்தியா – பிசிசிஐ அறிவித்திருக்கும் அட்டவணை

0
5933
Two Indian Teams

ஒரு காலகட்டத்தில் இந்திய அணிக்கு வீரர்கள் பற்றாக்குறை இருந்தது உண்மை தான். 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட அன்றிலிருந்து இந்திய அணிக்கு நிறைய இளம் வீரர்கள் விளையாட முன்வந்த வண்ணம் இருக்கின்றனர். டொமஸ்டிக் லெவல் தொடர்களில் ( சையது முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே மற்றும் ரஞ்சி டிராபி தொடர் ) சிறப்பாக விளையாடி பின்னர் ஐபிஎல் தொடரில் வந்து சர்வதேச வீரர்களுடன் இணைந்து விளையாட துவங்கி பின்னர் இந்திய அணியிலும் இடம் பெற்று வருகின்றனர்.

தற்பொழுது இந்திய அணியின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் விளையாடி பின்னர் தற்போது இந்திய அணியில் தனி ராஜாங்கம் அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இன்று இந்தியா அணியில் விளையாட வீரர்கள் பெருமளவில் போட்டி போட்டுக் கொண்டிருப்பது தான் உண்மை.

சீனியர் வீரர்களுக்கு அடுத்தபடியாக இந்திய அணியில் நின்று விளையாடும் அளவுக்கு நிறைய திறமை வாய்ந்த வீரர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு சீனியர் வீரர்கள் இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடி கொண்டிருந்த நேரத்தில், ராகுல் டிராவிட் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட கதை நமக்குத் தெரியும். தற்பொழுது அதே போல இந்த ஆண்டும் இளம் வீரர்களைக் கொண்ட ஒரு அணி ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது.

ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இளம் அணி

இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடர் போட்டிகளில் விளையாட தயாராகிக் கொண்டிருக்கிறது. இது முடிந்த பின்னர் மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாதத் துவக்கத்தில் தொடங்கி ஜூன் மாதம் முதல் வாரம் வரையில் இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார்கள்.

பின்னர் ஜூன் மாதம் 9ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இது முடிந்த பின்னர் ஜூலை மாதம் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி வீரர்கள் விளையாட போகின்றனர்.

பின்னர் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஏதேனும் குறிப்பிட்ட நாட்களில் இலங்கையில் ஆசிய கோப்பை நடைபெற உள்ளது. அந்த ஆசிய கோப்பைக்கு சீனியர் வீரர்கள் தலைமையிலான இந்திய அணி செல்ல உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்திய சீனியர் வீரர்கள் ஆசிய கோப்பை விளையாடிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் கூடுதல் தகவல் நமக்கு தற்போது கிடைத்துள்ளது.

அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் நடைபெறுவதற்கு முன்பாக ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்திய ரசிகர்களுக்கு இரட்டை விருந்து (சீனியர் வீரர்கள் விளையாடப் போகும் ஆசிய கோப்பை தொடர் மற்றும் இளம் வீரர்கள் விளையாட போகும் ஜிம்பாப்வேவிற்கு எதிரான தொடர் ) காத்திருப்பதால் தற்பொழுது அனைத்து இந்திய ரசிகர்களும் இந்த செய்தியை சமூக வலைதளங்களில் சந்தோஷமாக பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.