ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்து கருத்து தெரிவித்ததற்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பதிலடி கொடுத்திருக்கிறார்.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இந்திய அணி இன்று ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்கிறது. இந்திய அணி ஆஸ்திரேலியா செல்வதற்கு முன்பாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பத்திரிகையாளர் சந்திப்பில் அதிரடியான பதிலடியை தெரிவித்திருக்கிறார்.
இந்திய அணிக்கு நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு அல்லது மூன்று சதங்கள் மட்டுமே அடித்திருப்பதாகவும், அவர் வேறு ஒரு அணியில் இருந்திருந்தால் இந்நேரத்திற்கு நீக்கப்பட்டு இருப்பார் என்றும், ரிக்கி பாண்டிங் சில நாட்களுக்கு முன்பு பேசி இருந்தார்.
தற்போது ரிக்கி பாண்டிங் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருக்கிறார். மேலும் அவர் ஆஸ்திரேலியா கிரிக்கெட் குறித்து எந்த விதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து அவர் இந்திய அணி மற்றும் இந்திய வீரர்கள் பற்றி பேசி வருகிறார். இது இந்திய தரப்பை கடுமையாக கோபப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்து தெரிவித்த கவுதம் கம்பீர் கூறும் பொழுது “முதலில் ரிக்கி பாண்டிங்க்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்? அவர் முதலில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் பற்றி யோசிக்க வேண்டும். எனக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா பேட்டிங் பார்ம் பற்றி எந்த கவலையும் கிடையாது. அவர்கள் நம்ப முடியாத அளவுக்கு கடினமானமனிதர்கள். அவர்கள் நிறைய சாதித்து இருக்கிறார்கள் மேலும் சாதிக்கவும் போகிறார்கள்”
இதையும் படிங்க : இந்திய அணியை ஜெயிச்சாலும் வருத்தமா இருக்கு.. நாங்க இதுல முன்னேறியே ஆகணும் – தென் ஆப்பிரிக்கா கேப்டன் பேட்டி
“எனக்கு மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர்கள் இன்னும் கடினமாக உழைக்கிறார்கள். அவர்கள் இன்னும் ஆர்வமாக இருக்கிறார்கள். மேலும் சாதிக்க விரும்புகிறார்கள். டிரெஸ்ஸிங் ரூமில் என்ன மாதிரியான பசி இருக்கிறது என்பது எனக்கு முக்கியம். அது மொத்த அணிக்கும் முக்கியமானது. முந்தைய தொடரில் தோல்வி அடைந்த பிறகு எங்கள் வீரர்கள் இன்னும் பசியுடன் இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.