இங்கிலாந்தில் முன்னாள் வீரர்கள் விளையாடும் உலக லெஜென்ட்ஸ் சாம்பியன்ஷிப் டி20 லீக் நடைபெறுகிறது. இன்று இந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட பரபரப்பான போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி கடைசி ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக லெஜென்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்றியது.
இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற பாகிஸ்தான் கேப்டன் யூனுஸ் கான் தங்கள் அணி முதல் பேட்டிங் செய்யும் என தைரியமாக அறிவித்தார். இந்த தொடர் முழுக்க சிறப்பாக விளையாடி வந்த பாகிஸ்தான் அணிக்கு இந்த முறை பேட்டிங் சிறப்பான முறையில் அமையவில்லை.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் கம்ரன் அக்மல் 19 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து குறிப்பிடும்படி மிடில் வரிசையில் சோயப் மாலிக் 36 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். மிஸ்பா உல் ஹக் 15 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து காயம் காரணமாக வெளியேறினார். அப்ரிடி கடைசியில் 4 பந்தில் 4 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
மேலும் இந்த தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் யூனுஸ் கான் இந்த முறை இர்பான் பதானின் அற்புதமான பந்துவீச்சில் 11 பந்துகளுக்கு 7 ரன்கள் மட்டுமே எடுத்து கிளீன் போல்ட் ஆனார். பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் அனுரீட் சிங் 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ராபின் உத்தப்பா 8 பந்தில் 10 ரன்கள், சுரேஷ் ரெய்னா 2 பந்தில் 4 ரன்கள், குர்கீரத் சிங் 33 பந்தில் 34 ரன்கள் எடுத்தார்கள். மேலும் ஒரு துவக்க ஆட்டக்காரராக வந்த அம்பதி ராயுடு சிறப்பாக விளையாடி 30 பந்தில் ஐந்து பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க : 98 பந்து 144 ரன்.. ஏமாற்றிய சாய் சுதர்சன்.. கேப்டனாக கலக்கும் ஷாருக் கான்.. நெல்லையை வென்றது கோவை.. டிஎன்பிஎல் 2024
இந்திய அணி 15 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்திருந்தது. மேலும் 6 விக்கெட்டுகள் கைவசம் இருக்க வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. இந்த யூசுப் பதான் 16 பந்தில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியாக இந்தியா சாம்பியன்ஸ் அணிக்கு ஆட்டம் இழக்காமல் கேப்டன் யுவராஜ் சிங் 15 பந்தில் 22 ரன் மற்றும் இர்பான் பதான் 4 பந்தில் 5 ரன் எடுக்க 19.1 ஓவரில் இலக்கை எட்டி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. 2007 முதல் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியை ஞாபகப்படுத்திய போட்டியாக அமைந்தது!