இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டி புனேவில் நேற்று நடைபெற்றது.
பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றிக்கான காரணம் குறித்து இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானிக்க, அதற்கு பிறகு பேட்டிங் களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கக் கூடிய வகையில் அமைந்தது. 79 ரன்கள் எடுப்பதற்குள் முதல் 5 விக்கெட்டுகளை இந்திய அணி இழக்க அதற்குப் பிறகு களம் இறங்கிய ஹர்த்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே கூட்டணி சிறப்பாகவும், அதே நேரத்தில் அதிரடியாகவும் விளையாடி அணியின் ரண்களை உயர்த்தியது. இருவரும் தலா 53 ரன்கள் குவிக்க இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது.
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கம் நல்லபடியாக அமைந்தாலும் அதற்கு பின்னால் வந்த வீரர்கள் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஹாரி புரூக் மட்டும் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். இவரின் அதிரடியின் மூலமாக இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்கள் குவித்தது.
போட்டி முடிந்த பிறகு சூரியகுமார் யாதவ் பேசும்போது ” களத்தில் உள்ள அனைவரின் சிறந்த முயற்சியாக இந்த வெற்றியை பார்க்கிறேன். ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு பெரிய கூட்டம் ரசிகர்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்துக் கொண்டே இருந்தனர். 10 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த போதும் பின்வாங்க விரும்பவில்லை. நாங்கள் எந்த வகையான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம் என்று அணி வீரர்கள் அறிவார்கள். ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகள் இழந்தது எங்களுக்கு அது அதிகம் தான்.
இதையும் படிங்க:142 ரன் 68 பந்து.. ஹென்றிக்ஸ் ப்ரெவிஸ் கூட்டணி அபாரம்.. வில் ஜாக்ஸ் போராட்டம் வீண்.. 27 ரன்னில் எம்ஐ வெற்றி.. எஸ்ஏ டி20
ஆனால் அதற்குப் பிறகு ஹர்திக் பாண்டியா மற்றும் டுபே ஆகியோர் பேட்டிங் செய்த விதம் மிகவும் அபாரமாக இருந்தது. உண்மையில் வலைகளில் பேட்டிங் செய்வது போலவே இவர்கள் இருவரும் பேட்டிங் செய்தார்கள். வலைகளில் செய்வது போல நிஜத்திலும் இதே வகையில் அற்புதமாக பேட்டிங் செய்தார்கள். பவர் பிளேவிற்கு பிறகு நாங்கள் அவர்களை கட்டுப்படுத்த முடியும் என்று நினைத்தோம். நாங்கள் நினைத்தது போலவே அது சரியாக நடந்தது. துரதிஷ்டவசமாக குளிர்பான இடைவெளிக்கு பிறகு சிவம் துபேவால் வர முடியவில்லை. அவருக்கு பதிலாக வந்த ஹர்சித் ராணா சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். நம்ப முடியாத வகையில் இருந்தது” என்று கூறி இருக்கிறார்.