இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக அண்டர் 19 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கான் சதம் அடித்து 111 பந்துகளில் 107 ரன்கள் எடுத்தார்.
இதைத்தொடர்ந்து மூன்றாவது இடத்தில் வந்த அப்துல் காதிர் அதிரடியாக விளையாடிய 54 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். இதற்கடுத்து கேப்டன் பர்கான் யூசுப் 60 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் கவியா படேல் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரியன் வீர் 61 பந்துகளில் 58 ரன்கள், கேப்டன் லக்ஷயா 101 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார்கள். இதற்கு அடுத்து நடுவில் வந்த பேட்ஸ்மேன்களால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
இதற்கு அடுத்து பேட்டிக்கு வரிசையில் ஏழாவதாக வந்த மனல் சௌகான் 32 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். இங்கிருந்து கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டது. இந்திய அணியின் கையில் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது.
இப்படியான பரபரப்பான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் பத்தாவது ஆக வந்து சிறப்பாக விளையாடிய மோகித் உல்வா இறுதிவரை ஆட்டம் இழக்காமல் கடைசிப் பந்தில் பவுண்டரி அடித்து இந்திய அணியை சாம்பியன் ஆக்கினார். அதிரடியாக விளையாடிய அவர் 26 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 49 ரன்கள் எடுத்தார். இதில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் அடங்கும். பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்திய அணி உற்சாகமாக இதை கொண்டாடி வருகிறது!