இந்திய அணியின் தொடக்க வரிசை பேட்டிங் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் அணியின் படுதோல்வி குறித்து முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் தேர்வுக்குழுத் தலைவர் கிருஷ்மாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து கிருஷ்மாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்போது “முதல் போட்டியில் விராட் கோலி மட்டும் இல்லாவிட்டால் இந்தியா தோற்றுவிட்டிருக்கும். அதேபோல் இரண்டாவது போட்டியில் கே.எல். ராகுல் இல்லாவிட்டாலும் தோற்றுவிட்டிருப்போம். இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இன்னமும் நல்ல வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வதில் பிரச்சினைகள் உள்ளன”
“இந்தப் போட்டியில் அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒன்றுமில்லாமல் குழப்பத்துடன் காணப்பட்டனர். சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். இதுபோன்று ஒருபோதும் தோற்கக்கூடாது. இந்திய அணி தொடரில் முன்னிலையில் இருந்தாலும், வரவிருக்கும் வேர்ல்ட் கப் தொடரைக் கருத்தில் கொண்டால் அணி போதுமானதாகத் தெரியவில்லை” என்று கூறி இருக்கிறார்.
இதுகுறித்து கிருஷ்மாச்சாரி ஸ்ரீகாந்த் மேலும் பேசும்போது “வில் யங் கொடுத்த கேட்ச்களை இரண்டு முறை கோட்டைவிட்டது இந்திய அணிக்கு மிகவும் பின்னடைவாக அமைந்தது. அந்த நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தால் நியூசிலாந்தின் ஸ்கோரை கட்டுப்படுத்தியிருக்கலாம். ஆனால் நமது பேட்டிங் மிக மோசமாக இருந்தது, முதல் ஓவரிலேயே ஆட்டம் முடிந்துவிட்டது. 89 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஒரு மோசமான செயல்பாடு” என்று கூறி இருக்கிறார்.