இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதன் இரண்டாவது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாட்டிய நிலையில் டாஸை இழந்த இந்திய அணி முதலில் பந்து வீச ஆரம்பித்தது. 10 ஓவர்கள் முடிவதற்குள் 35 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகள் இழந்த வங்கதேச அணியை இளம் வீரர் ஹரிதாய் மற்றும் ஜேக்கர் அலி ஆகியோர் சிறப்பாக விளையாடி வங்காதேச அணியை மீட்டெடுத்தார்கள்.
இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 154 ரன்கள் குவித்தது. இதற்குப் பிறகு விக்கெட்டுகள் மளமளவினா இழந்ததால் வங்கதேச அணி 49.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 228 ரன்கள் குவித்தது. இந்திய அணி முகமது சமி 10 ஓவர்கள் வீசி 53 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களம்பிறங்கியது. வழக்கம் போல கேப்டன் ரோஹித் சர்மா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் துணை கேப்டன் கில் நிதானமாக விளையாடினார். ரோகித் சர்மா 41 ரன்கள் குவித்து வெளியேற, அதற்குப் பிறகு களம் இறங்கிய விராட் கோலி 38 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 22 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கில் தொடர்ச்சியாக தனது நான்காவது அரை சதத்தை பதிவு செய்தார்.
இதையும் படிங்க:கவனிக்க வைத்த இளம் வீரர்..100 ரன் 4 சாதனைகள்.. வலுவான இந்திய அணிக்கு எதிராக அபாரம்.. சாம்பியன்ஸ் டிராபி
அதற்கு பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 15 ரன் மற்றும் அக்சார் பட்டேல் 8 ரன்னில் ஆட்டம் இழந்தாலும், கே எல் ராகுல் கில்லுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைத்தது. 129 பந்துகளை எதிர் கொண்ட சுப்மான் கில் 9 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸ் என 101 குவித்தார். தனது முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடும் கில் முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியிருக்கிறார். விராட் கோலியும் தனது முதல் உலகக் கோப்பை ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு எதிராக சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக கே.எல் ராகுல் 41 ரன்கள் குவிக்க இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக 51 இன்னிங்ஸ்களில் 8 சதங்கள் அடித்ததன் மூலமாக குறைவான இன்னிங்ஸ்களில் 8 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை கில் படைத்திருக்கிறார்.