இந்திய அணியின் மூத்த பந்துவீச்சாளர் முகமது ஷமி, நியூசிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்படாத நிலையில், தனது ஓய்வு குறித்த திட்டங்கள் மற்றும் சீனியர் பிளேயர்கள் எதிர்கொள்ளும் விமர்சனங்கள் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
சமீபகாலமாக ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் தமது எதிர்காலம் குறித்து வெளியாகும் தேவையற்ற சர்ச்சைகளை சுட்டிக்காட்டிய ஷமி, ஓய்வு முடிவு என்பது முற்றிலும் தனிப்பட்ட வீரரின் முடிவு என்றும், அதில் மற்றவர்கள் தலையிடக் கூடாது என்றும் தனது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.
தமது ஓய்வு குறித்து முகமது ஷமி பேசும்போது “காலை 6:30 மணிக்கு எழுந்து கிரவுண்ட் செல்ல எனக்கு சலிப்பு ஏற்படும் நாளன்று, நானே முன்வந்து நன்றி சொல்லிவிட்டு விலகிவிடுவேன். ஆனால் எனக்கு இன்னும் சலிப்பு ஏற்படவில்லை. விளையாடுவதற்கான மோட்டிவேஷன் இன்னமும் என்னிடம் உள்ளது. எனது அபிப்பிராயத்தில் நான் தொடர்ந்து விளையாட வேண்டும். ஒரு ஸ்போர்ட்ஸ்பெர்சனாக, தொடர்ந்து நான்கு ஐந்து நாட்கள் காலை 6:30 மணிக்கு கிரவுண்ட் செல்ல முடியாத அளவு டயர்னஸ் உணர்ந்தால் மட்டுமே ஓய்வு பற்றி யோசிக்க வேண்டும்”
“நாட்டிற்காக இவ்வளவு காலம் சேவை செய்து பல ரெக்கார்டுகளை முறியடித்த ஒருவருக்கு ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. பெர்ஃபார்மன்ஸ் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்ற இறக்கமாக இருக்கலாம். யாரும் மெஷின் கிடையாது. 15 முதல் 17 ஆண்டுகள் உழைத்த ஒரு வீரரிடம் அந்த முடிவை விட்டுவிடலாமே” என்று கூறி இருக்கிறார்.
மேலும் சோஷியல் மீடியாவில் சீனியர் பிளேயர்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து தொடர்ந்து பேசுகையில் “ஒருவரது பெர்ஃபார்மன்ஸ் பிடிக்கவில்லை என்றால் அவர்களை செலக்ட் செய்யாதீர்கள். அதை விட்டுவிட்டு சோஷியல் மீடியாவில் சிறிய விஷயத்திற்கு கூட சிலர் தேவையில்லாமல் அனலைக் கூட்டி வேடிக்கை பார்க்கிறார்கள். நாம் ரியாக்ட் செய்ய வேண்டும் என்பதற்காகவே சிலர் இப்படி செய்கிறார்கள்” என்றும் கூறி இருக்கிறார்.