ஆஸ்திரேலியா அணியைச் சுருட்டி அதிரடியாக இந்திய அணி அபார வெற்றி!

0
2604
BGT

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இந்தியாவில் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி பிப்ரவரி 9 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெற அந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்தது!

இந்த நிலையில் பிப்ரவரி 17ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பித்தது. இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஸ்காட் போலன்ட் நீக்கப்பட்டு இடது கை சுழற் பந்துவீச்சாளர் குகனேமன் சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்கள் ஸ்டார்க், கிரீன் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை.

- Advertisement -

போட்டிக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்யும் என அறிவித்தார். வழக்கம்போல ஆஸ்திரேலியா துவக்க ஆட்டக்காரர் வார்னர் இந்த போட்டியிலும் சொதப்பி வெளியேறினார். ஆனால் மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா 81 ரன்கள் குவித்தார். ஹேன்ட்ஸ்காம் 72 ரன்கள் எடுத்தார். உலகின் நம்பர் 1 டெஸ்ட் பேட்டர் லபுசேன், நம்பர் 2 டெஸ்ட் பேட்டர் ஸ்மித் இருவரையும் ஒரே ஓவரில் அஸ்வின் வீழ்த்த அது இந்திய அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய அணியின் வேகப்பந்து பவீச்சாளர் முகமது சமி நான்கு விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அஸ்வின், ஜடேஜா தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். ஆஸ்திரேலியா அணி 263 ரன்கள் சேர்த்தது.

இதை அடுத்து தனது முதல் இன்னிங்ஸ் ஆரம்பித்த இந்திய அணியில் வழக்கம்போல் கே எல் ராகுல் சொதப்ப, கேப்டன் ரோஹித் சர்மா 32 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து வந்த புஜாரா, ஸ்ரேயாஸ் இருவரும் அடுத்தடுத்து வெளியேறினார்கள். ரவீந்திர ஜடேஜா 26 ரன்கள் எடுக்க, விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடி 44 ரன்களில் சர்ச்சைக்குரிய வகையில் நடுவரின் தீர்ப்பால் வெளியேறினார்.

வழக்கம்போல் இந்திய அணியின் கீழ் வரிசை பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியா அணியை சோதிக்க ஆரம்பித்தார்கள். அக்சர் பட்டேல், அஸ்வின் ஜோடி சத பார்ட்னர்ஷிப் அமைத்து பின்னோக்கி நின்ற இந்திய அணியை முன்னோக்கி அழைத்து வந்து ஆச்சரியப்படுத்தினார்கள். அஸ்வின் 37 ரன்கள் எடுத்து வெளியேறினார். சிறப்பாக விளையாடிய அக்சர் பட்டேல் 74 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். முடிவில் இந்திய அணி ஒரு ரன்கள் ஆஸ்திரேலியா அணியை விட பின்தங்கி 262 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து தலையில் பந்து தாக்கியதின் காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் வார்னர் விளையாட வரவில்லை. அவருக்கு பதிலாக ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டார். இந்த முறை துவக்க ஆட்டக்காரராக உஸ்மான் கவஜா மற்றும் டிராவீஸ் ஹெட் இருவரும் வந்தார்கள். அதிரடியாய் ஆடுவதை திட்டமாகக் கொண்டு இருவரும் வேகமாக விளையாடினார்கள். உஸ்மான் கவஜா ஜடேஜா பந்துவீச்சில் நேற்று 6 ரன்களில் வெளியேறினார். டிராவிஸ் ஹெட், லபுசேன் ஜோடி அதிரடியாக விளையாட, நேற்று ஒரு விக்கெட் மட்டும் இழந்து 50 ரன்கள் அதிரடியாக கடந்தது ஆஸ்திரேலியா அணி.

இன்று நடந்த மூன்றாவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மேற்கொண்டு 150 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு இலக்காக 200 ரண்களுக்கு மேல் தரும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது. மதிய உணவு இடைவேளைக்கு முன்பாகவே மீதமிருந்த ஒன்பது விக்கட்டுகளையும் இழந்து 113 ரண்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா அபாரமாக பந்து வீசி 42 ரன்கள் மட்டும் விட்டுத்தந்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மீதம் 3 விக்கட்டுகளை அஸ்வின் வீழ்த்தினார்.

இதற்கு அடுத்து இலக்காக 115 ரன்கள் கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு வழக்கம்போல் மீண்டும் கே.எல். ராகுல் சொதப்பினார். ஆனால் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் மூன்று பவுண்டரி இரண்டு சிக்ஸர்களுடன் 31 ரன்கள் சேர்த்து எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். இதற்குப் பிறகு வந்த விராட் கோலி இருபது ரன்கள், ஸ்ரேயாஸ் 6 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த புஜாரா கே எஸ் பரத் இருவரும் மேற்கொண்டு விக்கட்டுகள் விடாமல் இந்திய அணியை 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெல்ல வைத்தார்கள். புஜாரா 31 ரன்கள், கே எஸ் பரத் 23 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்கள். இதன் மூலம் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளை வென்று தற்பொழுது முன்னிலை வகிக்கிறது!