இன்று ஆந்திர மாநிலம் அனந்தபூர் மைதானத்தில் 2024 துலீப் டிராபி தொடர் தொடங்கியது. இதில் ஒரு போட்டியில் சுக்குமன் கில் தலைமை தாங்கும் இந்தியா ஏ அணியும் அபிமன்யு ஈஸ்வரன் தலைமை தாங்கும் இந்தியா பி அணியும் மோதிக்கொள்ளும் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முஷீர் கான் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அணியை காப்பாற்றி இருக்கிறார்.
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்தியா ஏ அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் தங்கள் அணி பந்து வீசும் என அறிவித்தார். மேலும் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான முறையில் அமைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக நட்சத்திர வீரர்கள் முதல் கொண்டு எல்லோரும் தடுமாறினார்கள்.
சரிந்த இந்தியா பி அணி
இந்த நிலையில் இந்தியா பி அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக வந்த கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 42 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 59 பந்தில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து சர்பராஸ் கான் 9, ரிஷப் பண்ட் 7, நிதீஷ் குமார் ரெட்டி 0, வாஷிங்டன் சுந்தர் 0, சாய் கிஷோர் 1 என வரிசையாக வெளியேறினார்கள்.
இந்தியா பி அணி ஆரம்பத்தில் கொஞ்சம் சிறப்பாக தொடங்கும் பொழுது 200 ரன்கள் எளிதாக கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு கட்டத்தில் 97 ரன்கள் எடுக்க ஏழு முக்கிய விக்கெட்டுகளை இழந்து விட்டது. களத்தில் பேட்ஸ்மேனாக முஷீர் கான் மட்டுமே இருந்தார்.
முஷீர் கான் காட்டிய முதிர்ச்சி
இந்த நிலையில் முஷீர் கான் உடன் வேகப் பந்துவீச்சாளர் நவ்தீப் ஷைனி ஜோடி சேர்ந்தார். இவரை உடன் வைத்துக் கொண்டு முஷீர் கான் அதிரடியாக விளையாட ஆரம்பித்து முதலில் தன்னுடைய அரை சதத்தை கடந்தார். இன்னொரு முனையில் நவ்தீப் ஷைனி விக்கெட்டை கொடுக்காமல் பொறுமையாக வாய்ப்பு கிடைக்கும் பொழுது பந்தை தடுத்து விளையாடினார்.
இதை பயன்படுத்திக் கொண்ட முஷீர் கான் பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இன்று முதல் நாள் ஆட்டம் முடிவடையும் பொழுது முஷீர் கான் ஆட்டம் இழக்காமல் 227 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 105, நவ்தீப் ஷைனி 74 ரன்கள் எடுத்திருந்தார்கள்.
இதையும் படிங்க : நான் பொறுப்பில் இருந்தா.. இவரை பாகிஸ்தான் டீம் பக்கமே சேர்க்க மாட்டேன் – கம்ரான் அக்மல் பேட்டி
சிறப்பாக விளையாடி இந்தியா பி அணியை மீட்ட இந்த ஜோடி 212பந்துகளில் 108 ரன்கள் எடுத்தது. இன்று முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா பி அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 79 ஓவர்களில் 202 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்தியா ஏ அணியின் தரப்பில் கலீல் அகமத்,ஆவேஸ் கான் மற்றும் ஆகாஷ் தீப் தல இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.