“இந்தியா ஆஸ்திரேலியா இங்கிலாந்து மூன்றும் டெஸ்ட் கிரிக்கெட்டை அழித்துவிடும்” – கிறிஸ் கெயில் அதிரடி தாக்கு!

0
1303
Gayle

நான்கு வருடங்களுக்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றுவதற்காக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கொண்டு வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடத்தப்படுகிறது!

இரண்டு ஆண்டுகள் நடக்கும் சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடருக்கான ஓட்டத்தில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளைக் கொண்டு ஐசிசி சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நடத்தி சாம்பியன் அணியைக் கண்டறிகிறது.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட் காப்பாற்றுவதற்காக இப்படி ஒரு புதிய முயற்சியில் ஐசிசி ஈடுபட்டது. மேலும் போட்டிகள் அதிக அளவில் டிரா ஆகாமல் இருப்பதற்காக, முடிவு தெரியும் வகையில் ஆடுகளங்களை அமைப்பதற்கு எல்லா கிரிக்கெட் வாரியங்களையும் ஐசிசி கேட்டுக் கொண்டிருந்தது.

தற்போது இதுவே டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பெரிய பிரச்சினையாகவும் மாறி இருக்கிறது. ஏனென்றால் மிகப்பெரிய ரசிகர் பலத்தை கொண்ட மைதானத்திற்கு பெரிய அளவு ரசிகர்கள் வருகின்ற இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கே அதிக டெஸ்ட் போட்டிகளை ஐசிசி வழங்குகிறது.

மற்ற சிறிய அணிகளுக்கு மிகவும் குறைந்த போட்டிகளை வழங்குகிறது. இதனால் மற்ற அணிகளின் செயல்பாடு மிகவும் பின் தங்குகிறது. இதுகுறித்து பலர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கிரீஸ் கெயில் கூறும் பொழுது ” பல ஆண்டுகளாக கிரிக்கெட் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது. இது இப்பொழுது பெரிய அளவில் வியாபாரம் ஆகிவிட்டது. டி20 லீக்குகளில் மட்டும் இல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பணம் பெரிய அளவில் புழங்குகிறது. சிறிய அணிகளை விட பெரிய அணிகள் இதில் பெரிய அளவில் பணம் சம்பாதிக்கின்றன. சிறிய அணிகள் இதனால் பாதிக்கப்படுகின்றன.

அனைவரும் பயன்பெறும் வகையில் இது மாற்றி அமைக்கப்பட வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் தரவரிசையில் கீழே இருக்கும் அணிகள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்வதற்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது மாதிரியாக அமைக்கப்பட வேண்டும்.

பெரிய அணிகளுக்குப் போலவே சிறிய அணிகளுக்கும் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். ஏனென்றால் அப்பொழுதுதான் எல்லா அணியினரும் ஒரே அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுவார்கள்.

இந்தியா ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற பெரிய நாடுகள் அதிக அளவில் போட்டிகளை விளையாடி மற்ற நாடுகள் குறைந்த அளவில் டெஸ்ட் போட்டிகளை விளையாடுவது டெஸ்ட் போட்டிகளை கொன்றுவிடும்.

அதே மாதிரி உலகம் முழுவதும் டி20 லீக்குகள் இருந்தாலும். எல்லாவற்றிலும் எல்லா வீரர்களையும் விளையாடுவதற்கு அந்தந்த கிரிக்கெட் வாரியங்கள் அனுமதிப்பதில்லை. இதனால் அவர்கள் தங்களுக்கான தகுதியான சம்பளத்தை பெற முடிவதில்லை!” என்று கூறியிருக்கிறார்!