நடப்பு துலீப் டிராபி 2024 தொடரில் இந்திய ஏ அணி வீரர் திலக் வர்மா இந்திய டி அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். மேலும் இந்த சதத்தின் மூலம் உடன் விளையாடிய சக அணி வீரர் ரியான் பராக்குக்கும் செக் வைத்திருக்கிறார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு துவங்கிய இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்தியா டி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்து வீசும் முடிவை எடுத்தார். முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி 290 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்கு சுழல் பந்துவீச்சாளர் சாம்ஸ் முலானி 89 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா 10 ரியான் பராக் 37 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்கள். ஹர்ஷித் ராணா 4 விக்கெட் கைப்பற்றினார்.
ஸ்ரேயாஸ் ஏமாற்ற போராடிய படிக்கல்
இந்த நிலையில் தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்திய டி அணிக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து வெளியேறினார். மற்ற வீரர்களும் பெரிய அளவில் பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை. இந்த நிலையில் தனி ஒரு வீரராக சிறப்பாக விளையாடிய தேவ்தத் படிக்கல் மட்டும் 92 ரன்கள் எடுத்தார். அந்த அணியின் 186 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. கலீல் அகமது மூன்று விக்கெட் கைப்பற்றினார்.
நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்தியா ஏ அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் மயங்க் அகர்வால் 56 மற்றும் பிரதம் சிங் 121 ரன்கள் எடுத்து சிறப்பான அடித்தளத்தை ஏற்படுத்தி தந்தார்கள். இதன் காரணமாக இந்திய ஏ அணி மிகவும் வலிமையான இடத்தில் இருந்தது.
திலக் வர்மா வைத்த சத செக்
இன்று தொடர்ந்து விளையாடிய இந்திய ஏ அணிக்கு ரியான் பராக் 20 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாட முற்பட்டு ஆட்டம் இழந்தார். ஆனால் ஒரு முனையில் மிகச் சிறப்பாக நிலைத்து நின்று விளையாடிய திலக் வர்மா 177 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகளுடன் சதம் அடித்து களத்தில் நிற்கிறார். அவருடன் இணைந்து விளையாடும் சஷ்வத் அதிரடியாக 85 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருக்கிறார். தேநீர் இடைவேளையின் போது இந்தியா ஏ அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 370 ரன்கள் எடுத்திருக்கிறது.
இதையும் படிங்க : இன்னும் 8 சிக்ஸ்.. யாராலும் தொட முடியாத சேவாக் சாதனை.. ரோகித் சர்மாவுக்கு பிரகாசமான வாய்ப்பு.. டெஸ்ட் கிரிக்கெட்
இந்திய தேசிய அணிக்கு ஆப் ஸ்பின் வீசக்கூடிய ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர் தேவைப்படுகிறது. இந்த இடத்திற்கு தற்பொழுது திலக் வர்மா மற்றும் ரியான் பராக் இருவரும் போட்டியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ரியான் பராக் அதிரடியாக விளையாடுவதை மட்டுமே நோக்கமாக வைத்து விக்கெட்டை தாரை பார்த்து வருகிறார். ஆனால் திலக் வர்மா அப்படி இல்லாமல் சூழ்நிலைக்கு மதிப்பளித்து விளையாடி சதம் அடித்திருக்கிறார். அவருடைய இந்தச் சதம் ரியான் பராக்குக்கு வைக்கப்பட்ட செக் ஆகவே பார்க்கப்படுகிறது!